ஜெர்மனி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று ஜெர்மனி, இங்கிலாந்துக்கு புறப்பட்டார்.
சென்னை,
தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு புறப்பட்டு செல்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 8.25 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் வந்திருந்தார்.
முதல்-அமைச்சரை வழியனுப்பி வைப்பதற்காக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகள், முதல்-அமைச்சரின் செயலாளர்கள் உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். வெளிநாட்டுக்கு புறப்படுவதற்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “ஒரு வார கால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நான் என்னுடைய பயணத்தை மேற்கொள்கிறேன். செப்டம்பர் 8-ந் தேதி நான் தமிழ்நாட்டுக்கு திரும்பி வருகிறேன். இந்த பயணத்தில் தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
2021-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிறகு இதுவரைக்கும் ரூ.10 லட்சத்து 62 ஆயிரத்து 752 கோடிக்கான முதலீடுகளை ஈர்த்து, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டிருக்கிறோம். இதன் மூலமாக 32 லட்சத்து 81 ஆயிரத்து 32 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இதில் பெரும்பாலான திட்டங்கள் நிறைவடைகிற நிலையில் இருக்கின்றன. பல நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கிவிட்டார்கள். இந்த வளர்ச்சி வந்திருக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு, மத்திய அரசு வெளியிடுகிற புள்ளி விவரங்களே ஆதாரமாக இருக்கின்றன. என்னுடைய ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திலும், தமிழ்நாடு அமைதிமிகு மாநிலமாக, திறமையான இளைஞர்கள் இருக்கிற மாநிலமாக, வாய்ப்புகளை ஊக்குவிக்கிற மாநிலமாக, இந்த ஆட்சியில் உயர்ந்திருக்கிற காரணத்தால், தரவுகளுடன் எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்திருக்கிறேன்.
இதுவரைக்கும் ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், ஸ்பெயின், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய 5 நாடுகளுக்கு நான் பயணத்தை மேற்கொண்டு, அமெரிக்க பயணத்தில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்; ஸ்பெயின் பயணத்தில் 3 புரிந்துணர்வு ஓப்பந்தங்கள்; ஜப்பான் பயணத்தில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்; ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
சிங்கப்பூரில் ஒரு ஒப்பந்தம் என்று 30 ஆயிரத்து 37 பேருக்கு வேலைவாய்ப்புகளை உறுதிசெய்யும் 36 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.18 ஆயிரத்து 498 கோடிக்கான முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கின்றன. இந்த 36 ஒப்பந்தங்களில், 23 திட்டங்கள் பல்வேறு செயல்பாட்டு நிலைகளில் இருக்கின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நான் புறப்பட்டு செல்கிறேன். அங்கு மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றி பத்திரிகை செய்தி அறிக்கைகள் தரப்படும். நான் திரும்பி வருகிற அன்றும் பத்திரிகையாளர்களை சந்தித்து அதுபற்றி விவரமாக சொல்வேன்.
தமிழ்நாட்டை நோக்கி புதிய முதலீடுகளை ஈர்க்க செல்கிறேன். இந்த பயணத்தில், செப்டம்பர் 4-ந் தேதி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடக்கிற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கு நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு, பெரியாரின் படத்தை திறந்து வைக்கக்கூடிய ஒரு அற்புதமான நிகழ்வு நடைபெற இருக்கிறது” என்று அவர் கூறினார்.
இந்நிலையில் ஜெர்மனி சென்றடைந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
வணக்கம்.. ஜெர்மனி..
ஜெர்மனியில் உள்ள எனது தமிழ் குடும்பத்தினர் என்னை பாசத்துடன் வரவேற்றனர். தமிழ்நாட்டின் சாதகமான அம்சங்களை வெளிப்படுத்தி முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி வந்திருக்கிறேன். முதலீடுகளை ஈர்த்து பிரகாசமான எதிர்காலத்தை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்த பெருமையுடன் வந்திருக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






