இங்கிலாந்து மந்திரியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

ஜெர்மனியை தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சென்றுள்ளார். தமிழகத்தில் 15 ஆயிரத்து 320 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ஜெர்மனியை சேர்ந்த 26 நிறுவனங்கள் ரூ.7 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்ய முன்வந்துள்ளது. ஜெர்மனியை தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார்.
இங்கிலாந்து நாட்டின், லண்டன் நகரில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அலுவலர்களுடனான தொடர்ச்சியான உயர் மட்ட கூட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, பாதுகாப்பு மற்றும் விண்வெளி, கப்பல் கட்டும் நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து மந்திரி கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
லண்டனில், இங்கிலாந்து மந்திரி கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்தேன். பசுமைப் பொருளாதாரம், கல்வி, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் கடல்சார் இணைப்பு ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகளைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின் இயக்கம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் தமிழ்நாட்டின் பலங்களை நான் எடுத்துரைத்தேன்.
மேலும் நிலையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் பொருளாதாரத்தை உருவாக்க இங்கிலாந்தின் ஒத்துழைக்கு அழைப்பு விடுத்தேன்.






