ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் போலீஸ் தலைமை அதிகாரி பலி; ராக்கெட் தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடக்கிறது.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் போலீஸ் தலைமை அதிகாரி பலி; ராக்கெட் தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் படுகாயம்
Published on

இந்தப்போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இரு தரப்பும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.பல மாதங்களாக நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணம் பாக்டிகாவின் வாசா குவா மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி ஆய்வு செய்து கொண்டிருந்தார்.அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் போலீஸ் சோதனைச்சாவடியை சுற்றிவளைத்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து போலீசார் தங்களது துப்பாக்கியால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் பல மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது.

பயங்கரவாதிகள் சுட்டதில் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பல போலீசார் படுகாயமடைந்தனர். இதனிடையே ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹூனான் மாகாணத்தில் குடியிருப்பு பகுதியில் மற்றும் அரசு அலுவலகங்களை குறி வைத்து பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். அடுத்தடுத்து பல ராக்கெட் குண்டுகள் விழுந்து வெடித்து சிதறியதில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலத்த காயமடைந்தனர்.

அதேபோல் நங்கார்ஹர் மாகாணத்தில் போலீசாரின் வாகனத்தில் பயங்கரவாதிகள் மறைத்து வைத்த குண்டு வெடித்து சிதறியதில் 3 போலீசார் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.மேற்கூறிய 3 தாக்குதலுக்கும் உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com