சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் கட்டுக்குள் வந்தது

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக நடந்து வந்த போராட்டத்தை போலீசார் நேற்று அதிரடியாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பீஜிங்,

சீனாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தீவிரமாக்கியது.

தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு தடைவிதிக்கப்பட்டது. இது தவிர பணியிடங்கள் கட்டுப்பாடு, பொருட்களை வாங்குவதில் கட்டுப்பாடு என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் அந்த நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்த சூழலில் கடந்த 24-ந் தேதி ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகர் உரும்கியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா கட்டுப்பாடுகளால் அந்த கட்டிடம் பாதியளவு பூட்டப்பட்டிருந்ததால் மக்கள் உடனடியாக வெளியேற முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்தாக குற்றம் சாட்டி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

பின்னர் இந்த போராட்டம் சீனாவின் பல்வேறு நகரங்களுக்கும் பரவியது. தலைநகர் பீஜிங், ஷாங்காய், உகான் உள்ளிட்ட பல நகரங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். அதேபோல் மக்களும் வீதிகளுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் குவிப்பு

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக தொடங்கிய போராட்டம் பின்னர் அரசு எதிர்ப்பு போராட்டமாக மாறியது. அந்த வகையில் கொரோனா கட்டுப்பாடுகளை திரும்பப்பெற கோரியும், அதிபர் ஜின்பிங் பதவி விலக வலியுறுத்தியும் கடந்த 4 நாட்களாக மக்கள் இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே பொதுமக்களின் கோபத்தை தணிக்கும் விதமாக அதிகாரிகள் நேற்று முன்தினம் சில கட்டுப்பாடுகளை தளர்த்தினர்.

இந்த நிலையில் சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் அரசுக்கு எதிராக நடந்து வந்த போராட்டங்களை அதிகாரிகள் நேற்று முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

போராட்டங்கள் நடந்து வந்த அனைத்து நகரங்களிலும் அதிகாலை முதலே அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டம் நடத்த வீதிகளுக்கு வந்தவர்களை கலைந்துபோக செய்தனர்.

மாணவர்களை வீட்டுக்கு அனுப்பியது

ஒரு சில நகரங்களில் பொதுமக்கள் தாமாகவே போராட்டத்தை கைவிட்டதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் நேற்று சீனாவின் எந்தவொரு பகுதியிலும் போராட்டம் நடைபெறவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையில் சீனாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக மாணவர்களை கட்டயமாக வீடுகளுக்கு அனுப்பியது.

அதேபோல் ஹாங்காங்கில் சீன அரசுக்கு எதிரான போராட்டங்கள் பரவுவதை தடுக்கும் விதமாக ஹாங்காங் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com