2025-க்குள் சீனா முழுமையாக படையெடுக்கும்: தைவான் அச்சம்

2025-க்குள் சீனா முழுமையாக படையெடுக்கும் என்று தைவான் அச்சம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தைபே,

1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரின் முடிவில் சீனாவும், தைவானும் பிரிந்தன. ஆனாலும் தைவானை தனது மாகாணங்களில் ஒன்றாக சீனா கூறி வருகிறது. ஆனால் தைவானோ தன்னை ஒரு தனி நாடாக கருதுகிறது. தைவானுக்கு என்று தனி அரசமைப்புச் சட்டமும், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும், 3 லட்சம் பேர் கொண்ட ராணுவமும் உள்ளது.

இந்த சூழலில் அண்மை காலமாக தைவானை தனது கட்டுப்பாட்டுகள் கொண்டு வரும் முயற்சியில் சீனா தீவிரமாக இறங்கியுள்ளது. அதோடு அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படைபலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் எனவும் சீனா கூறிவருகிறது. இதனிடையே கடந்த 1-ந்தேதி முதல் சீனா 150-க்கும் மேற்பட்ட போர் விமானங்களை தைவான் வான்பாதுகாப்பு மண்டலத்துக்குள் அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் 2025-ம் ஆண்டுக்குள் சீனா தங்கள் மீது படையெடுக்கும் என தைவான் அச்சம் தெரிவித்துள்ளது. இது குறித்து தைவான் ராணுவ மந்திரி சியு குவோ-செங் கூறுகையில், சீனாவுடனான ராணுவ பதற்றம் கடந்த 40 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு தற்போது மிக மோசமான நிலையில் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில், சீனா ஏற்கனவே தைவானை ஆக்கிரமிக்கும் திறனை கொண்டுள்ளது. ஆனால் அத்தகைய செயல்களைத் தூண்டுவதற்கு தைவான் எதுவும் செய்யவில்லை. ஆனாலும் 2025-க்குள் சீனா தைவான் மீது முழு அளவிலான படையெடுப்பை நடத்துவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. இதனை எதிர்கொள்ள தைவான் ராணுவ அமைச்சகம் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது என்று சியு குவோ-செங் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com