ராணுவ பட்ஜெட்டை ரூ.12 லட்சம் கோடியாக உயர்த்த சீனா முடிவு

ராணுவத்துக்கான பட்ஜெட்டை ரூ.12½ லட்சம் கோடியாக உயர்த்த சீனா முடிவு செய்துள்ளது.
ராணுவ பட்ஜெட்டை ரூ.12 லட்சம் கோடியாக உயர்த்த சீனா முடிவு
Published on

பீஜிங்,

உலகிலேயே ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா 2-வது இடத்தில் உள்ளது. 20 லட்சம் வீரர்களுடன் சீன ராணுவம் உலகின் பெரிய ராணுவமாக திகழ்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக சீனா தனது ராணுவத்தில் பல முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகளிடையே செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் கடற் படை மற்றும் விமானப்படையை விரிவாக்கம் செய்துள்ளது. குறிப்பாக கடற்படையில் புதிதாக போர் கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 2019-ம் ஆண்டுக்கான ராணுவ பட்ஜெட்டை 7.5 சதவீதத்துக்கு சீனா உயர்த்தி உள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வரைவு பட்ஜெட்டில் ராணுவத்திற்கு 177.61 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12 லட்சத்து 56 ஆயிரத்து 700 கோடி) ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டைவிட 7.5 சதவீதம் அதிகம் ஆகும். இதன்மூலம், சீனா அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட்டை நெருங்கி உள்ளது. அமெரிக்காவின் தற்போதைய ராணுவ பட்ஜெட் 200 பில்லியன் டாலராக உள்ளது.

இது குறித்து வெளியுறவு துணை மந்திரி ஜாங் யசூய் கூறுகையில், வளர்ந்து வரும் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் சீன ராணுவ பட்ஜெட் குறைவுதான். மற்ற நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை ராணுவத்துக்காக செலவிடுகிறது. ஆனால் சீனா 1.3 சதவீதம் மட்டுமே ஒதுக்குகிறது என தெரிவித்தார்.

மேலும், ஒரு நாட்டின் ராணுவம் மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதா? இல்லையா? என்பது பாதுகாப்பு செலவினத்தின் அதிகரிப்பால் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் வெளிநாட்டு மற்றும் தேசிய பாதுகாப்பு கொள்கைகள் அதை ஏற்றுக்கொள்கின்றன எனவும் அவர் கூறினார்.

சீன ராணுவத்தின் தலைவராக அதிபர் ஜின்பிங் பொறுப்பு ஏற்றுக்கொண்டது முதல், ஒவ்வொரு ஆண்டும் ராணுவ பட்ஜெட் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

எனினும் 2015-ம் ஆண்டு வரை இரட்டை இலக்க சதவீதத்தில் பட்ஜெட்டை உயர்த்தி வந்த சீனா, 2016-ம் ஆண்டு முதல் ஒற்றை இலக்கமாக குறைத்துக்கொண்டது. அதன்படி 2016-ல் 7.6 சதவீதமும், 2017-ல் 7 சதவீதமும் ராணுவ பட்ஜெட்டை உயர்த்திய சீனா கடந்த ஆண்டில் 8.1 சதவீதம் உயர்த்தியது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com