பூடான் உடனான எல்லை பிரச்சனையில் தலையிட இந்தியாவிற்கு உரிமை கிடையாது சீனா சொல்கிறது

பூடான் உடனான எங்களுடைய எல்லை பிரச்சனையில் இந்தியாவிற்கு எந்தஒரு சம்பந்தமும் கிடையாது என சீனா கூறிஉள்ளது.
பூடான் உடனான எல்லை பிரச்சனையில் தலையிட இந்தியாவிற்கு உரிமை கிடையாது சீனா சொல்கிறது
Published on

பெய்ஜிங்,

சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளதால், சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ளன. இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என கூறி வரும் சீனா, இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என மிரட்டி வருகிறது.

இந்தியா ஏற்கனவே இருதரப்பும் ராணுவத்தை பழைய நிலைக்கு திரும்ப அழைக்க வேண்டும் என கூறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனாவிற்கு பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக் கொள்ள சென்ற போது சீன அதிகாரியிடம் பேசிய போது இவ்விவகாரத்தை எழுப்பினார். அப்போதும் இந்தியா ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என சீனா கூறிஉள்ளது. இதுதொடர்பாக சீனா ஒரு 15 பக்க அறிக்கையை இப்போது வெளியிட்டு தொடர்ச்சியாக ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என கூறி உள்ளது. இந்நிலையில் சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், சீனா - பூடான் எல்லை விவகாரம் இருநாடுள் இடையிலான பிரச்சனையாகும். இதில் இந்தியாவிற்கு எந்தஒரு சம்பந்தமும் கிடையாது.

இருநாடுகள் இடையிலான எல்லைப் பிரச்சனையில் மூன்றாவது தரப்பாக தலையிட இந்தியாவிற்கு எந்தஒரு உரிமையும் கிடையாது. சீனா - பூடான் இடையிலான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தவும் உரிமை கிடையாது., என கூறிஉள்ளது.

இந்தியா சீனாவின் இறையாண்மையை மட்டும் மீறவில்லை, பூடானின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை மீறவில்லை என புதிய கதையை சீனா கூறிஉள்ளது. சீனா பூடானின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கிறது என கூறிஉள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், எல்லையில் இருநாடுகளின் நடவடிக்கையினால் அமைதி நிலவுகிறது என கூறிஉள்ளது. எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறல்களை எதிர்க்கொள்ள பூடான் இந்தியாவையே நம்பி உள்ளது என்பதே உண்மையாகும். சீனா தொடர்ச்சியாக பூச்சாண்டி காட்டிய நிலையில் இப்போது புதிய கதையை வெளியிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com