

பெய்ஜிங்,
சிக்கிம் செக்டாரில் முச்சந்திப்பாக (இந்தியா - திபெத்- பூடான்) உள்ள டோக்லாமில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு உள்ளது.
இந்தியா மற்றும் பூடான் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. இந்திய ராணுவம், சீனா ராணுவத்தின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி உள்ளது. இந்தியாவும் எல்லையில் பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து உள்ளது. சீனாவும் ராணுவத்தை குவித்து உள்ளது. இந்தியா தன்னுடைய ராணுவத்தை எல்லையில் இருந்து திரும்ப அழைக்க வேண்டும் எனவும், அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகவும் சீனா தரப்பில் தினசரி ஒரு அறிக்கையை வெளியிடப்பட்டு வருகிறது. இந்தியா தரப்பில் எல்லைப் பிரச்சனையை அமைதியாக தீர்த்துக் கொள்ளவே விரும்புகிறோம், ராணுவத்தை திரும்ப பெற மாட்டோம் என தெரிவிக்கப்பட்டுவிட்டது. எல்லையில் பதட்டமான நிலையே நீடிக்கிறது.
இந்தியா எல்லையில் ஏற்பட்டு உள்ள பிரச்சனையை தூதரகம் மூலமாக பேசி தீர்க்கவே விரும்புகிறது என தெரிவித்தது.
இந்நிலையில் சிக்கிம் செக்டார் மோதல் தொடர்பாக பேச்சுவார்த்தை என்பதற்கே இடம் கிடையாது, டோக்லாம் பகுதியில் இருந்து இந்தியா தன்னுடைய ராணுவத்தை திரும்ப பெறுவது ஒன்றே தீர்வு என சீனா கூறிஉள்ளது. சீனாவின் அதிகாரப்பூர்வமான செய்தி நிறுவனமான ஜின்குவா, இந்தியா தன்னுடைய பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்ப பெறவில்லை என்றால் சங்கடத்தை எதிர்க்கொள்ளும், நிலையானது மீண்டும் மோசமடையும் என குறிப்பிட்டு உள்ளது.
சீனா தன்னுடைய நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது, இவ்விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை என்பதற்கே இடம் கிடையாது. டோக்லாமில் இருந்து இந்தியா தன்னுடைய படைகளை திரும்ப பெற வேண்டும். சீனாவிற்கு எல்லை கோடானது, கீழே வரையில் உள்ளது, என குறிப்பிட்டு உள்ளது ஜின்குவா. ஜின்குவாவின் வர்ணனையில் லாடக் பகுதியையும் இந்தியாவுடன் பிரச்சனைக்குரிய பகுதி என குறிப்பிடப்பட்டு உள்ளது. லாடக் பகுதியை பிரச்சனைக்குரிய பகுதி என சீனா கூறுவது அரிதானதாகும். சீனா லாடக் பகுதியிலும் இந்தியாவிடம் வாலாட்டி வருகிறது.