அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்துவோம்; சீனா

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்துவோம் என சீனா இன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்துவோம்; சீனா
Published on

பெய்ஜிங்,

உலகின் முன்னணி பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக வர்த்தக போர் இருந்து வந்தது.

அமெரிக்க அரசு சீன இறக்குமதிகள் மீது தொடர்ந்து கூடுதல் வரி விதிப்பை அறிவித்தது. சீனாவும் பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீதான வரி விதிப்பை உயர்த்தியது.

சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கடந்த ஜூலை மாதம் முதல் 250 பில்லியன் டாலர் (1 பில்லியன் என்பது 100 கோடி, ஒரு டாலரின் மதிப்பு சுமார் ரூ.70) அளவுக்கு கூடுதல் வரியை விதித்தது. பதிலுக்கு சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது 110 பில்லியன் டாலர் அளவுக்கு அதிக வரியை விதித்தது.

இரு நாடுகள் இடையேயான இந்த வர்த்தகப்போர் உலகமெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டின் முடிவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினார்கள்.

இந்த சந்திப்பு இணக்கமான முறையில் நடந்தது. இதில் இரு தரப்பு வர்த்தக போரை தற்காலிகமாக நிறுத்துகிற வகையில், ஜனவரி 1ந்தேதி முதல் இரு நாடுகளும் ஒன்றின்மீது மற்றொன்று கூடுதல் வரிகளை விதிப்பது இல்லை என்று உடன்பாடு செய்து கொண்டனர். இது 90 நாட்களுக்கு நீடிக்கும்.

இரு நாடுகள் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். இதை வாஷிங்டன் வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில், சீனாவின் வர்த்தக துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி காவ் பெங் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, வேளாண் பொருட்கள், ஆற்றல், தானியங்கி மற்றும் பிற முக்கிய பொருட்களுக்காக இரு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட ஒருமித்த ஒப்புதலை உடனடியாக நாங்கள் அமல்படுத்துவோம் என கூறினார்.

அவர் தொடர்ந்து, இரு தரப்பினரும் அறிவுசார் சொத்து பாதுகாப்பு, தொழில் நுட்ப ஒத்துழைப்பு, சந்தை மற்றும் வர்த்தகம் ஆகியவை பற்றியும் ஆலோசனை நடத்த இருக்கிறோம். இவற்றிற்கான ஒருமித்த ஒப்புதலை அடைய கடுமையாக பணியாற்றுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், சீனா என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com