சிங்கப்பூர், புருனேவை சேர்ந்த குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை மீண்டும் தொடங்கும் சீனா

சிங்கப்பூர், புருனே குடிமக்களுக்கு 15 நாள் விசா இல்லாத நுழைவை சீனா மீண்டும் தொடங்க உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெய்ஜிங்,

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா பாதிப்புகள் தற்போது கணிசமாக குறைந்துள்ள நிலையில், சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் புதன்கிழமை (ஜூலை 26 ஆம் தேதி) முதல் சிங்கப்பூர் மற்றும் புருனே குடிமக்களுக்கு 15 நாள் விசா இல்லாத நுழைவை (Visa Free Entry) சீனா மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சிங்கப்பூர் மற்றும் புருனேயின் குடிமக்களுக்கு வணிகம், சுற்றுலா, உறவினர்கள் மற்றும் நண்பர்களை காண சீனா வருவது மற்றும் போக்குவரத்துக்காக சீனா எல்லை வழியாக பயணம் செய்வது உள்ளிட்ட அனைத்திற்கும், 15 நாள் விசா இல்லாத நுழைவு கிடைக்கும் என்று தூதரகங்கள் தங்கள் வலைத்தளங்களில் வெளியிட்ட அறிவிப்புகளில் தெரிவித்துள்ளன.

சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில், மக்களின் போக்குவரத்தை எளிதாக்குவதற்கான கூடுதல் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்று நம்புவதாக சிங்கப்பூரில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கின் பெய்ஜிங்கின் வருகையின் போது, சிங்கப்பூர்-சீனா உறவுகள் பற்றி பேசப்பட்டது, மேலும் சீனாவின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்து மற்றும் வணிக பரிவர்த்தனைகளை எளிதாக்கும் ஒரு மாற்றம் என்றும் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.

முன்னதாக சீனாவின் ஜீரோ- கோவிட் (Zero-COVID) கொள்கைகள் கடந்த ஆண்டு டிசம்பரில் கைவிடப்பட்டன, ஆனால் மார்ச் வரை சுற்றுலா விசாக்களை வழங்குவதை சீனா தொடங்காமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com