

பெய்ஜிங்,
சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் மற்றும் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் காரணமாக புதிதாக 1,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு நேற்று கொடிய கொரோனா வைரஸ் தொடர்பாக ஒரு சர்வதேச அவசர நிலையை அறிவித்து உள்ளது.
இந்நிலையில் வெளிநாடுகளிலுள்ள சீனாவின் ஹுபெய் மாகாணத்தை சேர்ந்த உகான் மக்களைச் சீனாவுக்கு அழைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறுகையில், வெளிநாடுகளிலுள்ள சீனாவின் ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்த பயணியர்கள், குறிப்பாக உகான் நகர பயணியர்களின் நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, அவர்களைச் சிறப்புப் பயணியர் விமானம் மூலம் கூடிய விரைவில், சீனாவுக்குக் கொண்டு வர, சீனா அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கொரோனா வைரஸின் தாக்குதல் காரணமாக கடந்த ஜனவரி 23 ம் தேதி ஹுபெய் மாகாணம் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது. அதற்கு முன்னர், கொரோனா வைரஸின் மையப்பகுதியான தலைநகர் உகான் பகுதிகளைச் சேர்ந்த 5 மில்லியன் மக்கள் அங்கிருந்து வெளியேறியதாக சீன அதிகாரிகளின் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதி மக்கள் சீனப் புத்தாண்டு மற்றும் வார விடுமுறையை கொண்டாடுவதற்காக வெளிநாடுகளுக்கு பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.