அசல் எல்லை கோட்டை சீனா தன்னிச்சையாக மாற்ற முயன்றது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

அசல் எல்லை கோட்டை தன்னிச்சையாக மாற்ற முயன்றது என சீனாவை மத்திய மந்திரி ஜெய்சங்கர் சாடியுள்ளார்.
அசல் எல்லை கோட்டை சீனா தன்னிச்சையாக மாற்ற முயன்றது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
Published on

வியன்னா,

சீனா மற்றும் இந்தியா, கடந்த 2 ஆண்டுகளாக கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் படைகள் குவிப்பில் ஈடுபட்டு உள்ளன. எல்லை பகுதியில் நிலவும் மோதல் போக்கால் பதற்ற நிலை காணப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2020-ம் ஆண்டில் நடந்த மோதலில் இரு தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்தது சர்ச்சை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து ராணுவ தளபதிகள் அளவிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை பல சுற்றுகளாக நடந்து வருகிறது. இதன்படி, எல்லை பகுதிகளில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. எனினும், முழு அளவில் சீனா படைகளை இன்னும் வாபஸ் பெறவில்லை.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் 20-ந்தேதி இரு நாடுகளும் 17-வது சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளன. இதில், மேற்கு பிரிவில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை பராமரிக்க ஒப்பு கொள்ளப்பட்டன.

எனினும், கடந்த காலங்களில் சீனா ஒப்பந்த விதிமீறலில் ஈடுபட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதனை ஆஸ்திரியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளிவிவகார மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அந்நாட்டில் செயல்பட்டு வரும் தினசரி பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.

அந்த பேட்டியில் அவர் பேசும்போது, இந்தியா மற்றும் சீனா என இரு நாடுகளும், அசல் எல்லை கோட்டை தன்னிச்சையாக மாற்ற கூடாது என்று ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், அவர்கள் ஒருதலைப்பட்ச முடிவு எடுத்து, அதனை மாற்ற முயன்றனர் என சீனாவை கடுமையாக சாடியுள்ளார்.

அதனால், எங்களது அனுபவத்தில் நேரிடையாக இதுபோன்ற விசயங்களை நாங்கள் புரிந்து கொள்ள முடிந்தது. எல்லை பகுதிகளில் படைகளை குவிக்க கூடாது என சீனாவிடம் எங்களது ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. ஆனால், அவர்கள் அதனை பின்பற்றவில்லை.

அதனாலேயே, தற்போது நாங்கள் பதற்றம் நிறைந்த சூழலை எதிர்கொண்டு உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார். சீனா எங்களை நோக்கி, நீங்கள் ஒப்பந்தங்களை பின்பற்றவில்லை என கூறலாம். ஆனால் செயற்கைக்கோள் புகைப்படங்கள், யாரிடம் தவறு உள்ளது என்று தெளிவாக காட்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய மந்திரி ஜெய்சங்கர், அந்நாட்டின் வெளிவிவகார மந்திரியான அலெக்சாண்டர் ஸ்காலென்பர்க்கை நேற்று சந்தித்து பேசினார்.

இதன்பின்னர் இரு நாட்டு மந்திரிகளும் கூட்டாக பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினர். இதில் பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், பயங்கரவாதத்தினால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை பற்றி ஆஸ்திரிய நாட்டு தலைவர்களுடன் பேசினேன்.

எல்லை கடந்த பயங்கரவாதம், வன்முறை, தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதம் உள்ளிட்டவற்றை பற்றியும் நாங்கள் விரிவாக பேசினோம் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com