இறப்பு விகிதம் அதிகரிப்பு.. சீனாவில் தொடர்ந்து 2வது ஆண்டாக சரிந்த மக்கள் தொகை

பிறப்பு விகிதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியானது, காலப்போக்கில் பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்கும் என்று கூறப்படுகிறது.
இறப்பு விகிதம் அதிகரிப்பு.. சீனாவில் தொடர்ந்து 2வது ஆண்டாக சரிந்த மக்கள் தொகை
Published on

பீஜிங்:

சீனாவில் மக்கள் தொகையை குறைக்க ஒரு குழந்தை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தொகை கணிசமாக குறைந்த நிலையில், 2016-ம் ஆண்டில் ஒரு குழந்தை கொள்கையை சீன அரசு தளர்த்தியது. இதில் ஓரளவுக்கு பலன் கிடைத்தபோதும், பிறப்பு விகிதம் எதிர்பார்த்த அளவிற்கு உயரவில்லை. இதனால் தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற அரசு அனுமதி வழங்கியது. இருந்தபோதும் கடந்த சில ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. அதேசமயம் இறப்பு விகிதம் உயர்ந்து வருகிறது.

60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2022ல் சீன மக்கள் தொகை குறைந்தது. கடந்த ஆண்டிலும் (2023) மக்கள் தொகை 2 மில்லியன் அளவுக்கு குறைந்தது. சீனாவில் தற்போது 1.4 பில்லியன் மக்கள் உள்ளதாகவும் தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு இரண்டாவது ஆண்டாக இறப்பு விகிதம் உயர்ந்து, பிறப்பு விகிதம் குறைந்திருப்பதால்,  மொத்த மக்கள் தொகையில் 2 மில்லியன் குறைந்ததாக தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

சீனாவில் இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் வயதானவர்கள் அதிகளவில் இருப்பார்கள். பிறப்பு விகிதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியானது சீனாவிற்கு நீண்டகால பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு சவாலாக உள்ளது. காலப்போக்கில் பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்கும் என்று கூறப்படுகிறது.

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்த சீனா, கடந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு சென்றது. இந்தியா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com