சீனாவில் கடலில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான பாலம் திறப்பு

சீனாவில் கடலில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான பாலத்தை அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங் இன்று திறந்து வைத்தார்.
சீனாவில் கடலில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான பாலம் திறப்பு
Published on

பீஜிங்

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மெக்காவ் மற்றும் தன்னாட்சி பிரதேசமான ஹாங்காங் பகுதிகளை சீனாவின் சுகாய் நகருடன் இணைக்கும் வகையில் தென்சீனக்கடலில் 55 கி.மீ. தொலைவுக்கு பாலம் கட்டப்பட்டு உள்ளது. 20 பில்லியன் டாலர் (சுமார் 1.40 லட்சம் கோடி) செலவில் அமைக்கப்பட்ட இந்த பாலப்பணிகள் 2016-ம் ஆண்டிலேயே முடிக்கப்பட்ட நிலையில், அதன் திறப்பு விழா தொடர்ந்து தள்ளிப்போனது.

நீண்ட நாள் தாமதத்துக்குப்பின் அந்த பாலம் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்பட்டது. சீன அதிபர் ஜி ஜிங்பிங், இந்த பாலத்தை முறைப்படி இன்று திறந்து வைத்தார்.

இந்த பாலத்தில் நாளை (புதன் கிழமை) முதல் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. உலகின் மிக நீள கடற்பாலமாக கருதப்படும் இந்த பாலம் தென்சீனக்கடலில் சுமார் 56,500 சதுர கி.மீ. பகுதியையும், அதை சூழ்ந்துள்ள 11 நகரங்களையும் உள்ளடக்கி இருக்கிறது. தென்சீனக்கடலை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் இந்த பாலத்தை கட்டியுள்ளது.

இந்த பாலத்தால் மேற்படி நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் 3 மணியில் இருந்து வெறும் 30 நிமிடங்களாக குறையும். இந்த பாலத்துக்கு மிகுந்த வரவேற்பு இருந்தாலும், ஹாங்காங் மக்களிடம் அதிருப்தி நிலவுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com