

பீஜிங்,
சீனாவில் இந்த மாதம் 56,000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு மாகாணமான ஜிலின் மாகாணத்தில் தான் அதிகளவில் புதிய பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
இந்நிலையில், சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காய் நகரின் பெரும்பாலான பகுதிகளில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு கொரோனா பரிசோதனை தொடங்கியது.
அதன்படி, ஷாங்காய் நகரமெங்கும் வெகுஜன கொரோனா பரிசோதனை நடைபெற்று வருவதால், புடாங் மாவட்டம் மற்றும் அருகிலுள்ள பகுதிகள், திங்கள் முதல் வெள்ளி வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும்.
பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இருக்கக்கூடாது என்பதற்காக சோதனைச் சாவடிகளில் பொருட்கள் கொண்டுவந்து டெலிவரி செய்யப்படும்.
மேலும், அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசியம் அல்லாத அனைத்து வணிகங்களும் மூடப்படும்.அத்துடன் பொது போக்குவரத்தும் நிறுத்தப்படும்.
2.6 கோடி மக்கள் தொகை கொண்ட நகரை, இரண்டாகப் பிரிக்கும் ஹுவாங்பு ஆற்றின் மறுபக்கம் இருக்கும் பகுதியில் அடுத்த வாரத்திலிருந்து பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும்.
சீன அரசின் பூஜ்ஜிய கொரோனா கொள்கையின்படி, இத்தகைய கடும் கட்டுப்பாட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதனை கொரோனாவுக்கு எதிரான மிகவும் சிக்கனமான மற்றும் பயனுள்ள தடுப்பு உத்தி என்று சீன அரசு அழைக்கிறது. இந்த கடுமையான நடவடிக்கையின் மூலம், கொரோனா வைரசால் சமூக பரவல் ஏற்படாமல் இருப்பதை முடிந்தவரை விரைவாக ஒழிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் சீனா கவனம் செலுத்துகிறது.
அதன்படி, பெருமளவிளான பரிசோதனைகள் மற்றும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் போன்ற முறைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி ஜின்பிங், அதிகமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊக்குவித்துள்ளார். இதனையடுத்து உள்ளூர் அதிகாரிகள் மிகத்தீவிரமான கட்டுப்பாட்டு நடைமுறைகளை செயல்படுத்தி வருகின்றனர்.
ஒருவேளை, கொரோனா பரவல் அதிகரித்தால், அதனை கட்டுப்படுத்த தவறிய அதிகாரிகளுக்கு தான் தண்டனை அளிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
சீனாவில் 87 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், குறைந்த அளவிலான முதியவர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 5.2 கோடிக்கும் அதிகமான மக்கள் இன்னும் தடுப்பூசி போடவில்லை.
கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட கொரோனா பாதிப்பு தகவலின்படி, ஷாங்காய் நகரில் 47 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.