அமெரிக்காவுக்கு தப்பி சென்ற சீன உளவுத்துறை துணை அமைச்சர் ; உகான் ஆய்வக தகவல்களை வெளியிட்டார்

சீனாவில் இருந்துதப்பிய சீன உளவுத்துறை துணை அமைச்சர். உகான் ஆய்வகம் பற்றி அனைத்து தகவல்களையும் அமெரிக்காவிடம் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவுக்கு தப்பி சென்ற சீன உளவுத்துறை துணை அமைச்சர் ; உகான் ஆய்வக தகவல்களை வெளியிட்டார்
Published on

வாஷிங்டன்:

கம்யூனிச நாடான சீனாவில் அனைத்து சட்ட திட்டங்களும் கடுமையானதாகும். யாருக்கும், எந்த பதவியில் இருப்பவர்களுக்கும் தயவு தாட்சண்யம் காட்டப்படாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே தீருவார்கள்.

இந்த நிலையில் சீனாவில் உயர் பதவி வகிப்பவர் அந்நாட்டின் துல்லியமான கண்காணிப்பில் மண்ணை தூவிவிட்டு தப்பியிருக்கும் சம்பவம் 30 ஆண்டுக்குப்பின் நடந்துள்ளது.

சீனாவின் உளவு அமைப்பான குவான்பூவில் பிறநாட்டு உளவாளிகளை கண்டுபிடிக்கும் பிரிவின் தலைவராக பணியாற்றியவர் டோங் ஜிங்வெய். கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரலில் இவர் உளவுத்துறையின் துணை அமைச்சராக பதவி ஏற்றார். ஜிங்வெய்யுடன் நெருக்கமாக இருந்த சில மூத்த அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி 15 ஆண்டு சிறை தண்டனை பெற்றனர்.

இந்த சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் ஜிங்வெய் தனது மகளுடன் சீனாவிலிருந்து தப்பி ஓடி ஹாங்காங் வழியாக அமெரிக்காவில் தஞ்சம் அடைந்ததாக சில மீடியா தகவல்கள் கூறுகின்றன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் 1989 தியானன்மென் சதுக்க படுகொலை சம்பவத்திற்குப் பின் சீனாவிலிருந்து தப்பி ஓடிய 2வது மூத்த அதிகாரி ஜிங்வெய் ஆவார்.

அதுவும், இவர் அமைச்சர் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன், சீன முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரியான ஹன் லியான்சயோ மட்டுமே சீனாவிலிருந்து தப்பி அமெரிக்காவில் தஞ்சமடைந்தார். அதன் பிறகு தப்பி இருப்பவர் ஜிங்வெய் மட்டுமே. ஜிங்வெய் உளவுத்துறையில் இருந்ததால் அவர் பல ரகசியங்களை அறிந்துள்ளார். எனவே, இவரை பற்றிய எல்லா தகவல்களையும் சீனா அழித்து விட்டது. ஜிங்வெய் புகைப்படம் கூட ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாக உள்ளது. சீனாவின் தேடு பொறி இணையதளமான பைடுவில் இருந்து ஜிங்வெய் புகைப்படங்கள் ஒன்று விடாமல் நீக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, ஜிங்வெய்யை எப்படியும் சீனாவுக்கு கொண்டு வந்து விட சீனா காய் நகர்த்துகிறது. கடந்த மார்ச் மாதம் அலாஸ்காவில் நடந்த அமெரிக்கா, சீனா வெளியுறவு துறை அமைச்சர்கள் சந்திப்பில் இது குறித்து சீனா கோரிக்கை விடுத்தது. ஜிங்வெய்யை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென சீன வெளியுறவுத்துறை விடுத்த கோரிக்கையை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிலின்கென் மறுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் வெளியானதாக சந்தேகிக்கப்படும் உகான் ஆய்வகம் பற்றி அனைத்து தகவல்களையும் அமெரிக்காவிடம் ஜிங்வெய், கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் ஆய்வு குறித்தும், சீன அரசின் உயிரி ஆயுதம் குறித்தும் பல ரகசிய தகவல்களை அவர் அமெரிக்காவிடம் கூறி உள்ளதாக தெரிகிறது.

இந்த தகவல்கள் அனைத்தும் நம்பகத்தன்மையுடன் இருந்ததால்தான், கொரோனா தோற்றம் குறித்த அமெரிக்க ஜனாதிபதி பிடன் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் முந்தைய ஜனாதிபதி டிரம்ப், கொரோனா விவகாரத்தில் சீனாவை குற்றம்சாட்டி வந்தார். ஆனால், புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற பிடன் ஆரம்பத்தில் இதைப் பற்றி பேசாத நிலையில், சமீபத்தில் சீனா மீது குற்றம்சாட்டத் தொடங்கி உள்ளார். கொரோனா தோற்றம் குறித்து வெளிப்படையான மறுஆய்வுக்கு சீன அரசு ஒத்துழைக்க வேண்டுமென அவர் பகிரங்கமாக வலியுறுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com