உக்ரைனில் தவிக்கும் சீன மக்களை தற்போதைய சூழலில் பத்திரமாக மீட்க முடியாது - கைவிரித்த சீன அரசு

சீன மக்கள் ஒவ்வொருவருடைய பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்ட பின்னரே, அவர்களை மீட்டு கொண்டு வருவோம் என்று உக்ரைனுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் தவிக்கும் சீன மக்களை தற்போதைய சூழலில் பத்திரமாக மீட்க முடியாது - கைவிரித்த சீன அரசு
Published on

கீவ்,

உக்ரைன் போர் பதற்றம் தீவிரமானதிலிருந்தே பல நாடுகள் பிரிட்டன், அமெரிக்கா ஜப்பான் என தங்கள் நாட்டு தூதர்கள் மற்றும் மக்களை வெளியேற்ற தொடங்கிவிட்டனர்.ஆனால் சீனா கடந்த வியாழக்கிழமை வரை எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

அதன்பின் உக்ரைனில் இருக்கும் சீனர்களை மீட்டு வர விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவித்தது.ஆனால் அதே நாளில், உக்ரைன் தங்கள் நாட்டு வான்வழி பாதையில் விமானங்கள் இயங்க தடை விதித்தது. இதனால் சீனாவால் விமானங்களை இயக்க முடியவில்லை.

இந்த நிலையில், உக்ரைனுக்கான சீன தூதர் பேன் சியான்ராங் தான் உக்ரைன் தலைநகர் கீவ் நகரை விட்டு வெளியேறி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

சீன மக்களை தவிக்கவிட்டுவிட்டு எங்கும் செல்ல மாட்டேன். சீனாவில் உள்ள கம்யூனிச கட்சிக்காரர்கள் இதுபோன்ற செயல்களை எப்போதும் செய்யமாட்டார்கள்.

இப்போதைய சூழ்நிலை மிக மோசமாக உள்ளதால் சீன மக்களை பத்திரமாக தாயகம் கொண்டு வருவது ஆபத்தானதாக முடியலாம்.

விரைவில் சீன அரசு முறையான திட்டம் வகுத்து மக்களை பத்திரமாக தாயகம் கொண்டு வரும். சீன மக்கள் ஒவ்வொருவருடைய பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்ட பின்னரே, முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களை மீட்டு கொண்டு வருவோம்

உக்ரைன் மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். அவர்களுடன் சுமூகமாக பழகுமாறு உக்ரைனில் உள்ள சீன மக்களை தூதர் கேட்டுக்கொண்டுள்ளார். முடிந்தவரை உள்நாட்டு மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டாம். ராணுவ வீரர்களிடமிருந்தும் விலகியே இருங்கள்.

இவ்வாறு சீன தூதரகம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் சுமார் 6000 சீனர்கள் படிப்பு மற்றும் தொழில் காரணங்களுக்காக தங்கி உள்ளனர். முன்னதாக, ரஷியா மீது சீனா பொருளாதார தடை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடாது என்றும் ரஷியாவின் கோரிக்கைகள் முறையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் சீன வெளியுறவு மந்திரி வாங்-இ, ஜெர்மன் வெளியுறவு மந்திரி அன்னாலெனா பேர்பாக்கிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com