சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு ஜின் பிங் 2-வது முறையாக தலைவர் ஆனார்

சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு அதிபர் ஜின்பிங் 2-வது முறையாக தலைவர் ஆனார்.
சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு ஜின் பிங் 2-வது முறையாக தலைவர் ஆனார்
Published on

பீஜிங்,

64 வயதான சீன நாட்டின் அதிபர் ஜின்பிங், வலிமை வாய்ந்த ஒரு தலைவராக உருவாகி வருகிறார். அவர் நாட்டின் அதிபராக மேலும் 5 ஆண்டுகள் பதவி வகிப்பதற்கு நேற்று முன்தினம் கட்சியின் தேசிய மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அத்துடன் சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து அவரது பெயர் சேர்க்கப்பட்டது. அவரது சித்தாந்தமும் இணைக்கப்பட்டது.

இதன்மூலம் கட்சியின் நிறுவனரான மாசேதுங், அவரை தொடர்ந்து தலைமைப்பதவிக்கு வந்த டெங் ஜியாவோபிங் ஆகியோருக்கு சமமான இடத்தை ஜின்பிங் பெற்றுவிட்டார். கட்சியில் அவருக்கு எதிர்ப்பே இல்லாத நிலை உருவாகி உள்ளது.

மீண்டும் தலைவர்

இந்த நிலையில் கட்சியின் தலைவராக 2-வது முறையாக நேற்று அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பூட்டிய அறைக்குள் நடந்த தேர்தலில் அவர் தேர்வு பெற்றுள்ளதாக பீஜிங்கில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதன்மூலம் அனைத்து அரசியல் அதிகாரங்களையும் கொண்டுள்ள அரசியல் விவகார நிலைக்குழுவுக்கு ஜின்பிங் தலைமை வகிப்பார். அதே நேரத்தில் கண்ணுக்கு எட்டிய வரையில் அவருக்கு ஒரு அரசியல் வாரிசை அவர் உருவாக்கவில்லை. இதன்மூலம் இனி வரும் காலங்களிலும் அவர் அனைத்து அதிகாரங்களும் படைத்த தலைவராக வலம் வருவார். அடுத்து 2022-ம் ஆண்டு நடக்க உள்ள சீன கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டிலும் மீண்டும் ஜின்பிங் அதிபராகவும், கட்சி தலைவராகவும் வருவது உறுதியாகி உள்ளது.

புதிய உறுப்பினர்கள்

இதேபோன்று 7 பேர் கொண்ட அந்த குழுவில் பிரதமர் லி கெகியாங்கும் தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார். 5 புதிய உறுப்பினர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் லீ ஜான்சு (வயது 67), துணை பிரதமர் வாங் யாங் (62), வாங் ஹூனிங் (62), ஜாவோ லெஜி (60), ஹான் ஜெங் (63) ஆவார்கள்.

68 என்ற ஓய்வு வயதை அடைந்தவர்களுக்கு மாற்றாக இவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

புதிய சகாப்தம்

புதிய உறுப்பினர்களை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து ஜின்பிங் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் மிகப்பெரிய செயல்திட்டம் ஒன்றை உருவாக்கினோம். அவற்றில் பல இலக்குகள் நிறைவேறி உள்ளன. மற்றவை இனிதான் நிறைவேற்றப்பட வேண்டும்.

சீனா நவீன மயம் என்ற புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது.

பல்லாண்டு கால கடின உழைப்பு, சீன பண்புநலன்களுடனான சோசலிசம் ஆகியவை புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைத்துள்ளன. அந்த வகையில் நாம் ஒரு புதிய தோற்றத்தைப் பெற வேண்டும், அதோடு நிறைய சாதனைகளை படைக்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியம்.

அமைதியும், வளர்ச்சியும் விலை மதிக்க முடியாதவை. அவை மதிக்கப்படவேண்டும். சீன கம்யூனிஸ்டு கட்சி பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்றும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com