

புதுடெல்லி,
புகழ்பெற்ற சீன வீடியோ பதிவர்கள் மற்றும் இணைய பிரபலங்கள், வாழ்க்கை முறை, பாரம்பரிய கைவினை, மொழி கற்றல் மற்றும் உணவு சார்ந்த பல்வேறு பிரபலமான சேனல்களில் இயங்குகின்றனர். இந்த பிரபலங்கள் இணையத்தில் செல்வாக்கு செலுத்தும் அல்லது தயாரிப்புகளை விளம்பரப்படுத்தும் ஒரு நடவடிக்கையின் பகுதியாக, அத்துமீறி படப்பிடிப்பு நடத்துவதாகவும் சில சமயங்களில் தனிப்பட்ட வீடுகளுக்குள் நுழைவதாகவும் மற்றும் உள்ளூர் சுகாதாரம் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் குறித்து இழிவான கருத்துகளை தெரிவிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.இவர்கள் இந்தியாவுக்கு எதிராக ஒரு புதிய போலி வீடியோ போரை தொடுக்க சமூக ஊடகங்களை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா குறித்த சர்வதேச பார்வைகளை மாற்றி வடிவமைக்க இதுபோன்ற போலி வீடியோ நிகழ்வு கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
வங்காளதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் ஏழை மக்கள் வசிக்கும் பகுதி களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட சீனா இணைய பிரபலங்களால் வீடியோக்கள் எடுக்கப்பட்டு அந்த காட்சிகள் டெல்லியின் காட்சிகளாக உலகளாவிய பார்வையாளர்களுக்கு காட்டுவதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ நடவடிக்கைகளுக்கு உள்ளூர் நபர்கள் சிலர் உதவியதாகவும், அவர்களுக்கு நாளொன்றுக்கு ₹500 வரை ஊதியம் வழங்கப்பட்டதாகவும் வங்காளதேச பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதன் பின்னணி மற்றும் வீடியோ பதிவுகளின் நோக்கம் குறித்து டாக்கா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சீனாவைச் சேர்ந்த மியன்மியான் என்ற பெண், கடந்த 1-ந் தேதி டாக்காவின் உத்தரா பகுதியில் இருந்து ஒரு வீடியோவை நேரலை செய்து உள்ளார். அப்போது தான் டெல்லியில் இருப்பதாக கூறிய அவர், அங்குள்ள வீடுகள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும், அடிப்படை வசதிகள் இல்லை என்றும் விமர்சித்தார். அதேபோல், டெக்பாரா பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றை படம்பிடித்த வாங்வெய் என்பவர், அப்பகுதி மக்கள் டீக்கடையில் பசுவின் சிறுநீரை கலந்து குடிப்பதாக கூறி அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் சீனாவின் வீசாட், டூயின் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது சம்பந்தப்பட்ட நாட்டின் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர், "ஒரு நாட்டை தவறான கண்ணோட்டத்தில் சித்தரிக்கும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது. டாக்காவில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை டெல்லியில் பதிவு செய்தவை போல் காட்டுவதற்காக வெளிநாட்டினர் பணம் கொடுத்து ஈடுபடுத்தப்படுவதாக கூறப்படும் செயல்கள் கண்டிக்கத்தக்கவை. தவறான தகவல்களை பரப்பும் இத்தகைய நடவடிக்கைகள் அவற்றில் ஈடுபடுபவர்களின் நம்பகத்தன்மையை பாதிக்கும்" என்றும் தெரிவித்தார்.