

பீஜிங்,
சீனாவைச் சேர்ந்த 24 வயது ஆதரவற்ற ஸு செங்ஹாங் என்ற இளைஞர் ஒருவர், உறவினர்கள் யாரும் இல்லாததால் தனது திருமணத்திற்கு யாரும் வரமாட்டார்கள் எனக் கருதி, இணையதளம் வாயிலாக நெட்டிசன்களுக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெட்டிசன்கள் நேரில் வந்து திருமணத்தில் பங்கேற்றதுடன், அலங்காரம், கார் ஏற்பாடு, பரிசுப் பொருட்கள் என உதவியதுடன், சிலர் இலவசமாகத் திருமண விருந்துக்குச் சமைத்துக் கொடுத்துள்ளனர். இந்த அன்பு பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சியாவோ சியாவோ ஸு என்ற இளைஞர் தொடக்கப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே தனது தந்தையை இழந்துவிட்டார். பின்னர் அவரது தாயாரும் மறுமணம் செய்து கொண்டதால் அவரும் அவரது மூத்த சகோதரரும் மட்டுமே ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து தங்களது வாழ்க்கையை கடத்தினர். இத்தனை கடினமான சூழ்நிலையிலும், சியாவோ சியாவோ ஸு கடுமையாக உழைத்து, தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்குத் தேவையான பணத்தை சிறுக சிறுக சேமித்துள்ளார். இருப்பினும், தனது திருமணத்திற்கு வந்திருந்து வாழ்த்த உறவினர்கள் என யாரும் இல்லையே என்ற கவலை அவரை வாட்டி வைத்தது.
குறைந்த அளவிலான உறவினர்களே இருந்ததால், சியாவோ சியாவோ ஸு இணையவழி பயனர்களை தனது திருமணத்திற்கு அழைக்கலாம் என முடிவெடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில்,
"கடுமையாக உழைத்து தான் காதலித்த பெண்ணை கரம்பிடிக்கப் பணத்தை சேமித்துவிட்டேன். ஆனால் திருமணத்திற்கு வர உறவினர்கள் அதிகம் இல்லாததால், இணையத்தில் உள்ள உங்களை அன்போடு அழைக்கிறேன்" என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் உடனடியாக "சகோதரா, இதோ நாங்க கிளம்பி வந்துட்டே இருக்கோம்!" என கமெண்ட் செய்து திருமணம் நடக்கும் இடத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். வந்த மக்கள் சும்மா வெறும் கையோடு வரவில்லை. தங்களால் முடிந்த உதவிகளையும், சீர்வரிசைப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு வந்தார்களாம். பல உணவு சமையல் கலைஞர்கள் தாமாக முன்வந்து விருந்தினர்களுக்கு சுவையான உணவை சமைத்துக் கொடுத்துள்ளனர்.
சில நல்நெஞ்சங்கள் திருமண ஊர்வலத்திற்குத் தேவையான சொகுசு கார்களை ஏற்பாடு செய்துள்ளனர். அதில் ஒருவர் தம்பதியரின் பயணத்திற்காக தனது 'மேபாக்' (Maybach) ஆடம்பரக் காரையே வழங்கியுள்ளார். மற்றவர்கள் திருமண மெழுகுவர்த்திகள், அலங்காரப் பொருட்களைக் கொண்டு வந்து வீட்டையே விழாக் கோலமாக மாற்றியுள்ளனர்.
இந்த நெகிழ்ச்சியான கதையை 'u/Sapphire-Crystal' என்ற ரெடிட் பயனர் பகிர்ந்த நிலையில், அது 3,000-க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று வைரலாகியது.