சீன புத்தாண்டு தினம்... வசந்த விழாவில் அதிர்ஷ்டத்தை வரவேற்கும் சீனர்கள்

வசந்த விழாவை கொண்டாடுவதற்காக வெளிநாடுகளில் வசிக்கும் சீனர்கள் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்புகின்றனர்.
சீன புத்தாண்டு தினம்... வசந்த விழாவில் அதிர்ஷ்டத்தை வரவேற்கும் சீனர்கள்
Published on

பெய்ஜிங்,

சீன காலண்டரின் அடிப்படையில் பிப்ரவரி 1 ஆம் தேதி(இன்று) சீனாவில் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. சீன புத்தாண்டை வசந்த விழா என்ற பெயரில் சீனர்கள் கொண்டாடுகின்றனர். இந்த வசந்த விழா கொண்டாட்டங்கள் 16 நாட்கள் நடைபெறுகின்றன. இதனையொட்டி சீனாவில் அரசு அலுவலகங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வசந்த விழாவை கொண்டாடுவதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வசிக்கும் சீனர்கள் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்புகின்றனர். இந்த ஆண்டும் கொரோனா சூழலுக்கு மத்தியில், வசந்த விழாவை கொண்டாடுவதற்காக சீனாவிற்கு திரும்பிய வெளிநாடு வாழ் சீனர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததாக கூறப்படுகிறது.

சீன புத்தாண்டு மற்றும் வசந்த விழாவின் முதல் நாளான இன்று, சீனாவில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வசந்த விழாவின் முதல் நாளில் அதிர்ஷ்டத்தை வரவேற்கும் வகையில், சீனர்கள் சிவப்பு நிற ஆடைகள் அணிந்து, சிவப்பு நிற காகித கத்தரிப்புகளைக் கொண்டு வீடுகளை அலங்கரிக்கின்றனர்.

புத்தாண்டு தினத்தன்று சீனர்கள் டம்ப்ளிங்க்ஸ் எனப்படும் இனிப்பு பலகாரத்தை தங்கள் வீடுகளிலேயே தயாரிக்கின்றனர். இந்த பலகாரத்தின் வடிவம் சீனாவில் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்கக்கட்டிகளை போல் இருப்பதால், புத்தாண்டு தினத்தில் இதனை சாப்பிடுவது செல்வ செழிப்பை கொண்டு வரும் என சீனர்கள் நம்புகின்றனர். இது தவிர நூடுல்ஸ், சாக்லேட்டுகள், ஸ்பிரிங்க் ரோல் உள்ளிட்ட உணவுகளையும் புத்தாண்டு தினத்தில் சீனர்கள் விரும்பி ருசிக்கின்றனர்.

மேலும் புத்தாண்டு வாழ்த்துச் செய்திகளை தங்கள் வீட்டுக் கதவுகளின் இரு புறங்களிலும் ஒட்டிவைக்கின்றனர். அதே போல் புத்தாண்டை வரவேற்க வான வேடிக்கைகள், பட்டாசுகள் மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் ஆகியவை நிகழ்த்தப்படுகின்றன. இவற்றின் மூலம் எதிர்வரும் புத்தாண்டு தங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கையாக உள்ளது.

வசந்த விழாவை முன்னிட்டு சீன அதிபர் ஜின்பிங் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஒற்றுமையின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஆண்டு வசந்த விழாவோடு, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற இருப்பதால், சீனாவில் கொண்டாட்டங்கள் கலைகட்டியுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com