

வன்முறைகளுக்கு மத்தியில் தலீபான் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்க்க ஆப்கானிஸ்தான் அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்தநிலையில் தலீபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் முல்லா பரதர் அகுந்த் தலைமையில் 9 பேரை கொண்ட பிரதிநிதிகள் குழு 2 நாள் பயணமாக சீனா சென்றுள்ளது. இந்த குழு நேற்று முன்தினம் சீன வெளியுறவு மந்திரி வாங் யியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இதுகுறித்து தலீபான் செய்தி தொடர்பாளர் முகமது நயீம் கூறுகையில், ஆப்கானிஸ்தானின் தற்போதையை நிலை குறித்தும், அமைதி, அரசியல், பொருளாதாரம் ஆகியவை குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டன. இரு நாட்டு உறவு குறித்தும் பேசப்பட்டது. அதோடு ஆப்கானிஸ்தான் நிலத்தை சீனா உள்பட எந்த நாட்டுக்கு எதிராகவும் யாரும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என சீனாவுக்கு உறுதியளிக்கப்பட்டது என கூறினார்.