

வாஷிங்டன்,
சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட 2 புதிய ராட்சத பாண்டா கரடிகள், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்காக அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சீனாவின் செங்டு நகரிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி அன்று, 6 வயதான ஆண் பாண்டா கரடி 'பிங் பிங்' மற்றும் பெண் பாண்டா கரடி 'பூ ஷுவாங்' ஆகியவை 'பெடெக்ஸ் பாண்டா எக்ஸ்பிரஸ்' எனப்படும் பிரத்யேக சரக்கு விமானம் மூலம் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டாவிற்கு கொண்டுவரப்பட்டன.
ஒரு மாதத்திற்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்டு, புதிய சூழலுக்குப் பழக்கப்பட்ட பிறகு, அட்லாண்டா உயிரியல் பூங்கா வளாகத்தில் புதிதாக மேம்படுத்தப்பட்ட 'ஆர்தர் எம். பிளாங்க் பாண்டா தோப்பில்' இவை தங்கவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் பார்வையாளர்கள் இவற்றை உற்சாகத்துடன் கண்டுகளித்து வருகின்றனர். அதில் சிலர் பாண்டாக்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் சந்திப்பிற்குப் பிறகு எட்டப்பட்ட 10 ஆண்டுகால பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி ஒப்பந்தத்தின் கீழ் இந்த பாண்டா கரடிகள் வழங்கப்பட்டுள்ளன. சீனாவின் 'பாண்டா அரசதந்திரத்தின்' ஒரு முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 2024-ம் ஆண்டில் வாஷிங்டன் டி.சி.-யில் உள்ள ஸ்மித்சோனியனின் தேசிய விலங்கு பூங்கா மற்றும் சான் டியாகோ உயிரியல் பூங்காவிற்கு தலா 2 பாண்டாக்கள் அனுப்பப்பட்டன. அட்லாண்டாவிற்கும் 2 பாண்டாக்கள் வந்துள்ளதால், அமெரிக்காவில் உள்ள சீன பாண்டாக்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.