

பெய்ஜிங்,
சீனாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஜீ ஜின்பிங் (வயது 64) அதிபராக உள்ளார். இவரது பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில் 2வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு ஏற்ப விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, கடந்த மார்ச் 11ந்தேதி அதிபர் மற்றும் துணை அதிபருக்கான 2 முறை பதவி வகிக்கும் வரம்பு பற்றிய அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து ஜின்பிங் நேற்று அதிபராக தேர்வானார்.
சீன கம்யூனிஸ்டு கட்சியின் நிறுவனர் தலைவர் மாவோ ஜெடாங் கடந்த 1949ம் ஆண்டு முதல் 1976ல் மரணம் அடையும் வரை சீனாவை ஆட்சி செய்த பெருமைக்கு உரியவர். அவருக்கு அடுத்து இந்த கவுரவம் ஜின்பிங்கிற்கு கிடைத்துள்ளது.
கடந்த வருடம் அக்டோபரில் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளராக தேர்வான ஜின்பிங், 20 லட்சம் வீரர்கள் கொண்ட வலிமையான ராணுவத்தின் ஒட்டுமொத்த தலைமை பதவியான மத்திய ராணுவ ஆணைய தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இதேபோன்று ஜின்பிங்கின் விசுவாசி மற்றும் நெருங்கிய நம்பிக்கைக்கு உரியவரான வாங் கீஷன் (வயது 69) துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். புதிய சீர்திருத்தத்தின்படி இவர்கள் இருவரும் ஆயுள் முழுக்க இந்த பதவியை வகிக்க முடியும்.
இந்நிலையில், சீன பிரதமர் லி கெகியாங் (வயது 63) அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிரதமராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதிபர் ஜின்பிங் அவரை நியமனம் செய்த நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றமும் இதற்கு ஒப்புதல் அளித்தது.