

பீஜிங்,
சீனாவில் ஏஐ பார்ட்னர் செயலி முடக்கப்பட்டதால் சீன இளைஞர்கள் துக்கம் அனுசரித்து வருகின்றனர்.
சீனாவின் நகர்ப்புறங்களில் வசிக்கும் இளைஞர்கள், கடுமையான பணிச்சுமை மற்றும் தனிமை காரணமாக அரட்டை அடிக்கும் ஏஐ செயலிகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் 24 மணி நேரமும் தங்களுக்குத் தகுந்தாற்போல் பேசும் இந்த மென்பொருட்களைப் பலரும் தங்களின் நிஜமான வாழ்க்கைத்துணையாகவே கருதத் தொடங்கினர்.
சமீபத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில முன்னணி ஏஐ செயலிகளின் சர்வர்கள் திடீரென முடங்கின. இதனால் தாங்கள் ஆசையாக வளர்த்த ஏஐ துணையின் குரலையோ, செய்திகளையோ கேட்க முடியாமல் இளைஞர்கள் தவித்தனர். தங்களின் ஆன்மா பிரிந்தது போன்ற வேதனையுடன், சமூக ஊடகங்களில் "எனது ஏஐ காதலி இறந்துவிட்டாள்" எனப் பதிவிட்டு துக்கம் அனுசரிக்கத் தொடங்கினர்.
தொழில்நுட்பத்தை மனிதர்கள் உணர்வுபூர்வமாகச் சார்ந்து வாழ்வது, எதிர்காலத்தில் நிஜ மனித உறவுகளையும், சமூகக் கட்டமைப்பையும் பெரிய அளவில் பாதிக்கும் என உளவியல் அறிஞர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.