சோழர் கால தாமிர செப்பேடுகள்; இந்தியாவிடம் ஒப்படைத்த நெதர்லாந்து

30 கிலோ எடை கொண்ட, 21 செப்பேடுகள் ஒரு வெண்கல வளையம் கொண்டு பிணைக்கப்பட்டு உள்ளன. அதில், முதலாம் ராஜேந்திர சோழரின் முத்திரை உள்ளது.
சோழர் கால தாமிர செப்பேடுகள்; இந்தியாவிடம் ஒப்படைத்த நெதர்லாந்து
Published on

தி ஹேக்

ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து நாட்டுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடைய வருகையை சிறப்பிக்கும் வகையில், இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை போற்றும் வகையில் இளம் கலைஞர்கள் சார்பில் நடனம், இசை கச்சேரி உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

பிரதமர் மோடியின் இந்த பயணத்தின்போது, பிரசித்தி பெற்ற ஆனைமங்களம் தாமிர தகடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இவை லெய்டன் தகடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. தென்னிந்தியாவின் சக்தி வாய்ந்த அரசாட்சிகளில் ஒன்றான, 11-ம் நூற்றாண்டு சோழ அரசாட்சி காலத்திலான இந்த கலை பொருட்கள் லெய்டன் பல்கலைக்கழகத்தில் கடந்த 300 ஆண்டுகளாக வைக்கப்பட்டு உள்ளன.

மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக, 2023-ல் யுனெஸ்கோ அமைப்பின் தலையீட்டால் இந்த செப்பேடுகள் திருப்பி தரப்பட்டு உள்ளன. இந்த செப்பேடுகள் சோழர்களுடைய பெருமையை குறிப்பிடுவதுடன், புத்த மதத்திற்கு அவர்கள் அளித்த ஆதரவையும் பறைசாற்றும் வகையிலான முக்கிய ஆவணங்களாகும்.

30 கிலோ எடை கொண்ட, 21 செப்பேடுகள் ஒரு வெண்கல வளையம் கொண்டு பிணைக்கப்பட்டு உள்ளன. அதில், முதலாம் ராஜேந்திர சோழரின் முத்திரை உள்ளது. இந்த பதிவுகளின்படி 985 முதல் 1,014 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் அவருடைய மகனான ராஜேந்திர சோழன் ஆகியோரின் காலத்தில், இவை உருவாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

டச்சு நாட்டின் கிழக்கு இந்திய நிறுவனம் நாகையில் 17-ம் நூற்றாண்டில் ஆதிக்கம் செலுத்தியபோது, டச்சு மிஷெனரியான புளோரென்சியஸ் கேம்பர் என்பவர் அவற்றை கைப்பற்றி, நெதர்லாந்துக்கு கொண்டு சென்றார். இறுதியில் அவை லெய்டன் பல்கலைக்கழக நூலகத்தில் வைக்கப்பட்டன. அவற்றை பற்றி பலர் ஆராய்ச்சி செய்து வந்தனர். எனினும், பொதுமக்கள் அவற்றை அணுக முடியாத வகையிலேயே இருந்தன.

இவை இந்தியாவுக்கு திருப்பி தரப்பட்டு உள்ளன. இந்தியாவின் கலாசார பாரம்பரிய மீட்பு முயற்சிகளில் கிடைத்த முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com