

பாகிஸ்தானில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கிறிஸ்தவர் ஒருவர் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் இஸ்லாமிய இறை தூதருக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டார் என கடந்த வியாழ கிழமை தனது நண்பர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் அகமது என்பவர் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து சந்தேக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு அந்நபரை பல்வேறு இடங்களில் போலீசார் தேடியுள்ளனர். அதனை தொடர்ந்து பஞ்சாப் மாகாணத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அப்பகுதியை சேர்ந்த மக்கள், மத குழுவினர் தலைமையில் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்த கூடும் என்ற அச்சத்தில் அந்த நபரை யாரும் அறியாத இடத்திற்கு போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.
அந்நகரை சுற்றி போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர் என்றும் அப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
பாகிஸ்தானில் மதம் அல்லது இறை தூதருக்கு எதிராக கருத்து தெரிவிப்பது என்பது மிக பரபரப்பு நிறைந்த விசயம். இதில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபர்களை தீவிரவாதிகள் தங்களது இலக்காக கொண்டு அழித்து விடுவர்.