

வாஷிங்டன்
2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அமெரிக்காவின் வர்த்தக மையம் மற்றும் பென்டகன் தாக்கபட்டது. இதன் முக்கிய குற்றவாளியாக கருதபட்டவர் அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன். அவருக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு தாக்குதல்கள் நடத்த தொடங்கியது.
இதை தொடர்ந்து பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் ரகசியமாக தங்கி இருந்தது அமெரிக்க படைக்கு தெரியவந்தது. இதையடுத்து 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி அமெரிக்க கமாண்டோ படையினர் ஹெலிகாப்டரில் சென்று அதிரடி தாக்குதல் நடத்தி பின் லேடனை கொன்றனர்.
இந்த தாக்குதலின் போது பின்லேடன் வைத்திருந்த கோப்புகளை அமெரிக்க ராணுவம் பறிமுதல் செய்தது. இருப்பினும், இந்த சம்பவம் குறித்து இதுவரை வேறு எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், ஒசாமா பின்லேடன் சம்பந்தப்பட்ட சுமார் 4 லட்சத்து 70 ஆயிரம் கோப்புகளை அமெரிக்க மத்திய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ளது. பின் லேடனின் தனிப்பட்ட டைரி, கோப்புகள், ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் பின்லேடனின் மகன் ஹம்ஸா பின் லேடனின் திருமண வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
பின்லேடனின் கணினியிலிருந்து எடுக்கப்பட்ட ஹாலிவுட் மற்றும் கார்டூன் படங்களையும், பின்லேடன் குறித்த மூன்று ஆவணப்படங்களையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. சர்வதேச ரீதியாக பிரபலமான கார்ட்டூன் நிகழ்ச்சியான டாம் & ஜெர்ரியின் வீடியோக்கள் பல இருந்தன. டாம் & செர்ரி அத்தியாயங்கள் மொத்தம் 160 ஆகும். இதைல் 138 அத்தியாங்கள் பின்லேடனிடம் இருந்தன.