என்ன இது? பருவநிலை மாற்ற கோரப்பிடியில் இந்தியா, தமிழகம், சென்னை... அதிர்ச்சி அறிக்கை வெளியீடு

தொடர்ச்சியான வெப்பம், ஈரப்பதம் கொண்ட இரவுகள், தூக்க இழப்பை ஏற்படுத்துகின்றன என ஆய்வு தெரிவிக்கின்றது.
பருவநிலை மாற்றம், இந்தியா, தமிழகம், சென்னை
Published on

நியூயார்க்

உலக அளவில் பருவநிலை மாற்றத்தின் கோரப்பிடியில் இந்தியாவின் பல்வேறு நகரங்கள் சிக்கியுள்ள அதிர்ச்சி அறிக்கை வெளியாகி உள்ளது.

உலக அளவில் மனிதர்களுக்கு தூக்கம் முக்கிய விசயங்களில் ஒன்றாக உள்ளது. இரவில் தூக்கம் சரியாக வராமல் தவிக்கும் மக்கள் பல்வேறு துன்பத்திற்கு ஆளாகின்றனர். இதனை போக்க மருந்து எடுத்து கொள்வதும், வேறு சில பயிற்சிகளில் ஈடுபடுவதும் என தூக்கம் தேடி இரவை மட்டுமின்றி பகலையும் தொலைக்கும் நபர்கள் உள்ளனர்.

1,338 நகரங்கள்

இந்த நிலையில், 'கிளைமேட் சென்ட்ரல்' என்ற அமைப்பு உலகளாவிய மக்களின் தூக்கம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. உலகம் முழுவதும் 1,338 நகரங்கள் அந்த ஆய்வுக்காக எடுத்து கொள்ளப்பட்டன. இதில், 1970-ம் ஆண்டுக்கு பின்னர் உலக அளவில் தூக்க இழப்பானது இரட்டிப்படைந்து உள்ளது தெரிய வந்துள்ளது.

அந்த ஆய்வில், எந்தெந்த நாடுகள், நகரங்களில் வசிப்பவர்களிடையே குறைவான தூக்கம் காணப்படுகிறது. அதற்கான காரணிகள், எவ்வளவு மணிநேரம் மக்கள் தூக்கம் தொலைக்கின்றனர்? அதற்கு பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன? போன்ற விசயங்கள் ஆய்வில் எடுத்து கொள்ளப்பட்டன.

நாடுகளின் பட்டியல்

இதனையடுத்து, பருவநிலை மாற்றம் மக்களை விலையாக கொள்கிறது என்ற தலைப்பில், புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், வெப்பம் தொடர்பான பருவநிலை மாற்றம் சார்ந்த விசயங்களால், மக்கள் தூக்கம் இழந்து பாதிக்கப்படும் உலக நாடுகளின் பட்டியல் கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த வரிசையில், ஆசியாவில் உள்ள இந்தியா முதல் இடம் பிடித்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தவிரவும், நாட்டில் பல்வேறு நகரங்கள் இதனால் பாதிக்கப்பட்ட தகவலும் தெரிய வந்துள்ளது. இதில், இந்தியாவில் முதல் இடத்தில் தென்னிந்தியா உள்ளது. ஆண்டுக்கு, 78 முதல் 91 மணிநேரம் வரை அதிக வெப்ப இரவுகளால் மக்கள் தூக்கம் இழக்கின்றனர். இவற்றில் பருவநிலை மாற்ற பாதிப்பால் 8 முதல் 9 மணிநேரம் வரை தூக்கம் கெடுகிறது.

தூங்கா நகரம்

அந்த வகையில், தென்னிந்தியாவில் தமிழகம் முதல் இடம் பிடித்து உள்ளது. அதில், பெரிய மெட்ரோ நகரங்களின் வரிசையில், அதிக வெப்பம் கொண்ட இரவுகளால், ஆண்டுக்கு 93 மணிநேரம் வரை மக்கள் தூக்கம் இழந்து, இந்தியாவின் 'தூக்கமற்ற தலைநகராக' சென்னை மாறியுள்ளது என்று ஆய்வு தெரிவிக்கின்றது.

இந்த வகையில், பிற பெருநகரங்களை பின்னுக்கு தள்ளி சென்னை முதல் இடம் பிடித்து உள்ளது. இதனால், உலக அளவில் தூங்கா நகரம் என பெயர் பெற்ற நகராக சென்னை உருவெடுத்துள்ளது என அறிக்கை வழியே தெரிய வருகின்றது.

இந்திய பெருநகரங்கள்

இந்திய பெருநகரங்கள் வரிசையில் சென்னைக்கு அடுத்து, மும்பை (84 மணிநேரம்), கொல்கத்தா (80 மணிநேரம்), குஜராத் (78 மணிநேரம்), ஐதராபாத் (75 மணிநேரம்), பெங்களூரு (67 மணிநேரம்), டெல்லி (66 மணிநேரம்) மற்றும் புனே (65 மணிநேரம்) ஆகிய நகரங்கள் உள்ளன. பிற நகரங்களின் வரிசையில் நெல்லூர், திருச்சி, கொச்சி, கோழிக்கோடு, குண்டூர், விசாகப்பட்டினம் ஆகியவை உள்ளன. ஆனால், குளிர் பிரதேசங்களில் இந்த விகிதம் குறைந்து காணப்படுகிறது. இதன்படி, ஸ்ரீநகரில் 27 மணிநேரம் என்ற அளவில் உள்ளது.

தென்னிந்தியாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை எடுத்து கொண்டால், தமிழகத்திற்கு அடுத்து புதுச்சேரியில் ஆண்டுக்கு சராசரியாக ஒரு நபர் 92 மணிநேரம் தூக்கம் இழந்து தவிக்கிறார். தொடர்ந்து ஆந்திர பிரதேசம் (88.6 மணிநேரம்), கேரளம் (88.3 மணிநேரம்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

பருவநிலை மாற்றம்

வெப்ப நிலை உயர்வால், அந்த நாளின் வெப்பம் மட்டும் உயராமல், வெப்ப இரவுகளும் ஏற்பட்டு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தூக்க இழப்பால் பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.

பருவநிலை மாற்றம் சார்ந்த இதனால் ஏற்பட கூடிய தாக்கம், கால அளவு பற்றி பார்ப்போம். உலக அளவில், 2020-2025 ஆண்டுகளில் வெப்பம் சார்ந்த வருடாந்திர தூக்க இழப்பு சராசரியானது 56 மணிநேரம் என கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் பருவநிலை மாற்றமே 10 சதவீதம் அளவுக்கு முக்கிய காரணியாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில், மேற்காசியா முதல் இடத்தில் உள்ளது.

மேற்காசியாவுக்கு அடுத்து தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா ஆகியவை பட்டியலில் உள்ளன. எனினும், ஆசிய பகுதியில் அமைந்துள்ள இந்தியாவை எடுத்து கொண்டால் ஒட்டுமொத்தத்தில், சென்னை முதல் இடத்தில் (ஆண்டுக்கு 93 மணிநேரம்) உள்ளது. மும்பை (84 மணிநேரம்), கொல்கத்தா (80 மணிநேரம்) என 2 மற்றும் 3-ம் இடங்களை பிடித்துள்ளன.

தமிழகம்

இவற்றில் பருவநிலை மாற்ற பாதிப்பால் ஆண்டுக்கு நபர் ஒருவர், தமிழகத்தில் 7.9 மணிநேரம் கூடுதலாக தூக்கம் இழக்கிறார். இது இந்தியாவிலேயே மிக அதிக அளவாகும். இந்த பட்டியலில் கர்நாடகா (7.8 மணிநேரம்), ராஜஸ்தான் (7.0 மணிநேரம்) அடுத்தடுத்து உள்ளன.

இதனால், அதிக வெப்பம் போன்ற பருவநிலை மாற்றங்கள், ஒட்டுமொத்த தூக்க பாதிப்பில் 10 சதவீதம் அளவுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன என அறிக்கை தெரிவிக்கின்றது.

தூக்க இழப்பு

தொடர்ச்சியான வெப்பம், ஈரப்பதம் கொண்ட இரவுகள், தூக்க இழப்பை ஏற்படுத்துகின்றன என ஆய்வு தெரிவிக்கின்றது.

வெப்பம் சார்ந்த விசயங்களால் தூக்கம் ஏன் கெடுகிறது? என்ற விவரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. உடல் குளிர்ச்சியாக இருக்கும்போது, தூக்கம் நன்றாக வரும். தூக்கம் அதனை சார்ந்து இருக்கும். இரவானது வெப்பப்பொழுதுகளாக இருக்கும்போது, அது தூக்க நடைமுறையை பாதிக்கிறது.

விளைவுகள்

இரவுநேர வெப்பநிலை அதிகரித்து இருக்கும்போது, தூக்கத்தின் கால அளவும், அதன் தரமும் குறைகிறது. வெப்ப காலங்களிலும், வெப்ப பிரதேச பகுதிகளிலும் மற்றும் பாதிக்கப்பட கூடிய நிலையிலுள்ள மக்களுக்கும் இந்த விளைவுகள் கடுமையாக இருக்கும். தூக்க குறைவால், மனநிலை மாற்றம், உற்பத்தி திறன் குறைவு ஏற்படுவதுடன், நினைவு திறன், எதிர்ப்பு சக்தி உள்ளிட்டவையும் பாதிக்கப்படும்.

இந்தியாவில், மக்கள் தொகை அடர்த்தியான நகரங்களில் காணப்படும் நகர்புற வெப்ப தீவு விளைவுகளால் அதிகளவிலானோர் முடங்குகின்றனர். இதனால் பெருமளவில், வயது முதிர்ந்தோர், பெண்கள், குறைந்த வருவாய் கொண்ட வீட்டினர், குளிர்ச்சியான சூழலுக்கான வசதி இல்லாதோர் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

பருவநிலை மாற்றம் தொடரும் பட்சத்தில், வெப்பநிலை உயர்ந்து, இரவு தூக்கம் கெடுவதுடன், உலகம் அதிவெப்பமயம் ஆனதற்கு கொடுக்கும் மற்றொரு பெரிய விலையாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com