பருவநிலை மாற்றம் எதிரொலி: அழிந்து போன 99% முன்னோர்கள்; ஆய்வில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!!

3 லட்சம் ஆண்டுகள் வரை மனித இனத்தின் புதைபடிவங்கள் பற்றிய சான்றுகள் எதுவும் கிடைக்காமல் இருந்துள்ளன.
Image Courtesy:  India Today
Image Courtesy:  India Today
Published on

நியூயார்க்,

உலகில் பருவநிலை மாற்றம் பற்றி அவ்வப்போது, வளர்ந்த நாடுகள் மற்றும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றன. இதற்காக கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடு செய்ய முன்வரவேண்டும் என கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

இதுதவிர, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் கழிவுகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கான காரணிகளை குறைக்க வேண்டும் என்றும் கூட்டத்தின்போது நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும், அதில் போதிய முன்னேற்றம் இல்லாத சூழல் காணப்படுகிறது.

சமீபத்தில், பருவநிலை மாற்றம் தொடர்ச்சியாக காட்டுத்தீ, வெப்ப அலை போன்றவை ஏற்பட்டு மனிதர்களில் பலர் பாதிப்புக்கு ஆளாகினர். வெப்ப அலையில் சிக்கி மனிதர்களும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர். ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ஆறுகள், நீர்நிலைகள் வறண்டு போய் காணப்பட்டன.

சர்வதேச ஆய்வு

இந்நிலையில், 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனித இனத்திற்கு ஏற்பட்ட நெருக்கடியான நிலை பற்றி சர்வதேச ஆய்வு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் பருவநிலை மாற்றம் விளைவாக ஏற்பட்ட அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளன.

இதன்படி, ரோம் நகரில் உள்ள சேபியன்சா பல்கலை கழகம் மற்றும் புளோரென்ஸ் பல்கலை கழகத்தின் நிபுணர்கள் மற்றும் பல ஆய்வாளர்கள் சேர்ந்து ஆய்வு ஒன்றில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய ஆய்வு முடிவுகள், ஜர்னல் சயின்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி, 50 வெவ்வேறு மனித இனத்தின் 3,154 தனிநபர்களின் மரபணுக்களை முழுவதும் பரிசோதனை செய்து உள்ளனர்.

அழிவு நிலை

இதில் கிடைத்த தகவல்களை கொண்டு, பருவநிலை மற்றும் புதைபடிவம் உள்ளிட்ட தகவல்களுடன் இணைத்து, ஹோமோசேபியன்ஸ் என்ற மனித இனம் பூமியில் தோன்றுவதற்கு முந்தின காலகட்டத்தில் இருந்த விவரங்களை பற்றி ஆய்வு நடத்தப்பட்டது.

இதன் முடிவில், 9 லட்சத்து 30 ஆயிரம் ஆண்டுகள் மற்றும் 8 லட்சத்து 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பகுதியில், நம்முடைய முன்னோர்களின் மக்கள் தொகை 98.7 சதவீதம் என்ற அளவில் திடீரென குறைந்துள்ளது.

இதனால், இனப்பெருக்க திறன் வாய்ந்த 1,300 தனிநபர்களே எஞ்சியிருந்துள்ளனர். இது தற்போது பாண்டா என்ற கரடி வகை அழிவு நிலையை சந்தித்திருக்கும் நிலைக்கு ஒப்பாகும்.

புதிய மனித இனம்

இந்த நிலையானது, தீவிர பருவநிலை மாற்றம் எதிரொலியாக ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதகமற்ற சூழ்நிலையால், ஆப்பிரிக்க பகுதிகளில் தீவிர வறட்சி ஏற்பட்டு உள்ளது.

பெரிய வகை பாலூட்டியினங்கள் முழுவதும் அழிந்து போயின. இதில் நம்முடைய முன்னோர்கள், தப்பி பிழைப்பது என்பது கடினம் என்ற வகையில் இருந்தது. இதனால், அவர்கள் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டனர்.

எனினும், இந்த மாற்றத்திற்கான நிகழ்வால், ஹோமோ ஹீடெல்பெர்கென்சிஸ் என்ற புதிய மனித இனம் தோன்ற வழிவகுத்தது. இவர்கள் ஹோமோ சேபியன்ஸ் என்ற மனித இனத்திற்கு முன்னோர்களாக இருந்த இனம் என கூறப்படுகிறது.

3 இனங்கள்

இந்த ஆய்வு முடிவுக்கு ஏதுவாக, இந்த காலகட்டத்தில் மனித புதைபடிவங்கள் கிடைக்காமல் போனது.

ஏறக்குறைய 3 லட்சம் ஆண்டுகள் வரை எந்தவித தகவலும் கிடைக்காத நிலை காணப்பட்டது. 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனித புதைபடிவங்கள் பற்றிய சான்றுகள் நிறைய கிடைத்தன. ஆனால், 9,50,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சான்றுகள் ஆப்பிரிக்க கண்டம் மற்றும் யுரேசியா பகுதியில் மறைய தொடங்கின.

அதன்பின்னர், 6.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மீண்டும் புதைபடிவ சான்றுகள் கிடைக்க தொடங்கின. இடைப்பட்ட அந்த 3 லட்சம் ஆண்டுகளில் சான்றுகள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இந்த 6.5 லட்சம் ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த தகவல்களும் ஹோமோ ஹீடெல்பெர்கன்சிஸ் மனித இனத்துடன் தொடர்புடையவை. இந்த மனித இனம் ஆப்பிரிக்கா முதல் யுரேசியா வரை பரவியிருந்தது. அவர்கள் நம்முடைய கடைசி பொதுவான முன்னோர்கள் என நம்பப்படுகிறது.

இந்த இனத்தில் இருந்தே 3 வெவ்வேறு இனங்கள் தோன்றியுள்ளன. இதன்படி, ஆப்பிரிக்காவில் ஹோமோ சேபியன்ஸ் என்றும், ஐரோப்பிய பகுதியில் நியாண்டர்தால் இனம் என்றும் ஆசியாவில் டெனிசோவன்ஸ் என்றும் 3 இனங்கள் பரிணாம வளர்ச்சி பெற்றன.

இதனால், பருவநிலை மாற்றம் எதிரொலியாக, நமது முன்னோர்களில் 99 சதவீதத்தினர் அழிந்து போயுள்ளனர் என அந்த தகவல் தெரிவிக்கின்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com