ஆடையோ சீன தயாரிப்பு; ஆனால் சீனாவுக்கு வரி... லீவிட்டை சாடிய நெட்டிசன்கள்


ஆடையோ சீன தயாரிப்பு; ஆனால் சீனாவுக்கு வரி... லீவிட்டை சாடிய நெட்டிசன்கள்
x

லீவிட், பிரெஞ்சு தயாரிப்பை அணிந்து இருக்கிறார். ஆனால், விளம்பரத்தில் சீனாவின் நகல் காட்டப்படுகிறது என ஒருவர் தெரிவித்து உள்ளார்.

பீஜிங்,

அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து காணப்படும் சூழலில், சமூக ஊடகத்தில் அது வேறு வகையான பரபரப்பை கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளரான கரோலின் லீவிட் இந்த சர்ச்சைக்கு இலக்காகி உள்ளார். அவர் அணிந்துள்ள ஆடை விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

அப்படியென்ன அதில் உள்ளது என்றால், சீன தூதர் ஜாங் ஜிஷெங், எக்ஸ் வலைதளத்தில் லீவிட் அணிந்துள்ள ஆடையின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அதில் உள்ள கயிறு சீனாவில் தயாரான ஒன்று என பகிர்ந்து இருக்கிறார்.

அதற்கு ஒரு பயனாளர் சீனாவின் மாபு நகரில் உள்ள தொழிற்சாலையில் இருந்து அந்த கயிறு தயாரிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். ஜாங் வெளியிட்ட பதிவில், சீனாவை குற்றம் சொல்வது என்பது தொழில். சீனாவிடம் இருந்து பொருட்களை வாங்குவது என்பது வாழ்க்கை என குறிப்பிட்டு உள்ளார்.

அதற்கேற்ப, சீன சமூக ஊடகங்களில் ஒன்றான வெய்போவில் இருந்து சில ஸ்கிரீன்ஷாட்டுகளையும் ஜாங் இணைத்துள்ளார். அதில், அந்த பயனாளர், இந்த ஆலையிலேயே வேலை பார்க்கிறேன் என்றும், லீவிட்டின் ஆடையில் உள்ள கயிறு நான் வேலை செய்யும் ஆலையிலேயே தயாரிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

இந்த பதிவு ஆன்லைனில் வெளியானதும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது. சிலர் லீவிட்டை போலியான நடிப்பை வெளிப்படுத்துபவர் என்றும் சீனாவை சாடிக்கொண்டே சீன தயாரிப்பு ஆடையை அணிந்து கொள்கிறார் என்றும் குற்றச்சாட்டாக தெரிவித்தனர்.

அரசியல்வாதியின் தரம் வாய்ந்த செயல்: சீனாவை குற்றம்சாட்டு, மலிவான பொருட்களை வைத்து கொள் என ஒருவர் பதிவிட்டு உள்ளார். எப்படி, சீன தயாரிப்பை சாடி விட்டு, சீன தயாரிப்பு ஆடையை அணிந்தபடி இரண்டையும் ஒருசேர லீவிட் மேலாண்மை செய்கிறார்? என ஒருவர் கேட்டுள்ளார்.

எனினும், அவருக்கு ஆதரவாகவும் சிலர் பதிவிட்டு உள்ளனர். இது போலியான தகவல். லீவிட் பிரெஞ்சு தயாரிப்பை அணிந்து இருக்கிறார். ஆனால், விளம்பரத்தில் சீனாவின் நகல் காட்டப்படுகிறது என ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இன்னொருவரோ, ஆடம்பர ரக நிறுவனத்தின் தயாரிப்பை அவர்கள் நகல் எடுத்து உள்ளனர் என நன்றாக தெரிகிறது என குறிப்பிட்டு இருக்கிறார். எனினும், எது உண்மை என்று லீவிட்டுக்கே தெரியும்.

1 More update

Next Story