சுறாக்களின் ரத்தத்தில் கொக்கைன், காபின்... கடலும் சீர்கெட்டு போன அவலம்

அவற்றின் ரத்தத்தில் கொலஸ்டிரால், குளுக்கோஸ், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல விசயங்களும் மாறுபாடடைந்து உள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.

சுறாக்களின் ரத்தத்தில் கொக்கைன், காபின்... கடலும் சீர்கெட்டு போன அவலம்
Published on

லுகாயா

கரீபியன் நாடுகளில் ஒன்றான பஹாமஸ் நாடு இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக உள்ளது. பல நூற்றுக்கணக்கான தீவுகளை உள்ளடக்கிய இந்த நாட்டை நீர் சூழ்ந்து, இயற்கை வளம் செழித்து காணப்படுகிறது. இந்த நிலையில், அதன் கடல் பகுதியில் உள்ள நீர்வாழ் உயிரினங்களை ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை செய்தபோது அதிர்ச்சி தகவல் வெளியானது.

அதில், சுறா மீன்களின் ரத்தத்தில் ஆய்வு செய்தபோது கொக்கைன் என்ற போதை பொருள், காபின், வலி நிவாரணி மற்றும் பிற மருந்து பொருட்களும் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதனை உயிரியியலாளர் நடாஸ்கா வோஸ்னிக் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். பஹாமஸ் நாட்டின் எலுவுதீரா தீவுக்கு அருகே 85 சுறா மீன்களின் ரத்த மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில், 3-ல் ஒரு பங்கு சுறாக்களில் காபின், அழற்சி எதிர்ப்பு மருந்துகளான அசிட்டோமினோபென் மற்றும் டைகுளோபினாக் ஆகியவையும், மற்றும் கொக்கைன் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதனால் இயற்கை சார்ந்த சூழலியல் நிலையில் இருந்து, கடல் சீர்கெட்டு போயிருப்பதும், அதனை உடனடியாக சரி செய்ய வேண்டிய அவசர தேவையும் ஏற்பட்டு உள்ளது என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.

இதுதொடர்பாக, பரானா மத்திய பல்கலைக்கழக உயிரியியலாளரான வோஸ்னிக் கூறும்போது, இந்த போதை பொருட்கள் கடல்சார் சுற்றுச்சூழலுக்குள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இது கழிவுநீருடன் அடித்து வரப்பட்ட நீர் அல்லது வேறு வகையான நீர், கடலில் கலப்பதன் மூலம் ஏற்பட்டிருக்க கூடும் என்றார்.

எனினும், அந்த பகுதிக்கு அருகே பயன்பாட்டில் இல்லாத மீன் பண்ணை ஒன்று உள்ளது. அதற்கு அடிக்கடி நீச்சல் வீரர்கள் வருகை தருவார்கள். அவர்களின் வழியே இந்த பொருட்கள் சுறாக்களுக்கு கடத்தப்பட்டு இருக்கும். ஏனெனில், ஆராய்ச்சியில் அந்த பகுதிக்கு அருகே நீந்தி கொண்டிருந்த சுறா மீன்களின் ரத்தத்தில் இந்த பொருட்கள் கலந்திருப்பது உறுதியாகி இருக்கிறது என்றார்.

அவர்கள் நீரிலேயே சிறுநீர் கழிப்பது மற்றும் கழிவுகளை கொட்டுவது ஆகியவற்றை செய்கிறார்கள். உணவு பொருளா? அல்லது வேறு ஏதேனும் அந்நிய பொருளா? என்று அறிவதற்காக சுறாக்கள் அவற்றை கடித்து பார்ப்பது வழக்கம். அப்போது, அது உடலின் உள்ளே சென்றுள்ளது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது என்று வோஸ்னிக் கூறுகிறார்.

இதுதவிர, அவற்றின் ரத்தத்தில் கொலஸ்டிரால், குளுக்கோஸ், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல விசயங்களும் மாறுபாடடைந்து உள்ளன என்றும் தெரிய வந்துள்ளது. இந்த மாற்றங்கள் தீங்கு தருபவையா? அவற்றின் செயல்களில் பாதிப்பு ஏற்படுத்துபவையா? என்ற விவரங்கள் உறுதியாக தெரியவில்லை என்று அவர் கூறுகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com