ஆப்கானிஸ்தானில் கூட்டுப்படைகள் தாக்குதல்: குழந்தைகள், பெண்கள் என அப்பாவி மக்கள் 23 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நடந்த கூட்டுப்படைகள் தாக்குதலில், குழந்தைகள், பெண்கள் என அப்பாவி மக்கள் 23 பேர் பலியாகி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கூட்டுப்படைகள் தாக்குதல்: குழந்தைகள், பெண்கள் என அப்பாவி மக்கள் 23 பேர் பலி
Published on

காபூல்,

அமெரிக்காவில் வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம், நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின் மீது பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பினர் விமானங்களை மோதி கொடூரமான தாக்குதல்கள் நடத்தினர்.

2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி நடந்த இந்த தாக்குதல்கள் உலகையே உலுக்கின. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் கொன்று குவிக்கப்பட்டனர். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் நாசமாயின.

அதைத் தொடர்ந்து அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா உடனடியாக போர் தொடுத்தது. அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்களை விரட்டியடித்தது. மக்கள் ஆட்சியை ஏற்படுத்தியது. இந்தப் போர் நடவடிக்கைகள் 2014-ம் ஆண்டு முடிவுக்கு வந்தன.

அதைத் தொடர்ந்து அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கிருந்து வாபஸ் பெறப்பட்டன. இருப்பினும், அங்கு பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு உள்நாட்டுப்படைகளுக்கு உதவவும், ஆலோசனைகள் வழங்கவும் அமெரிக்க கூட்டுப்படை வீரர்கள் 16 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் தலீபான் உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கு எதிராக வான்தாக்குதல்களை அவ்வப்போது நடத்துகின்றனர்.

இந்த நிலையில், அங்கு ஹெல்மாண்ட் மாகாணத்தில், கார்ம்சர் மாவட்டத்தில் அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல் நடத்தி உள்ளன. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட அப்பாவி மக்கள் 23 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் உள்ளூர்வாசிகள் குறைந்தபட்சம் 30 பேர் பலியானதாக கூறுகின்றனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. துணைத்தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடந்துள்ள வான்தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகளும், பெண்களும்தான். 10 குழந்தைகளும், 8 பெண்களும், 5 ஆண்களும் பலியாகி இருக்கிறார்கள். 3 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் இணைந்து இந்த தாக்குதல்களை நடத்தி உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே ஹெல்மாண்ட் மாகாணத்தில், 3 நாட்களுக்கு முன்னதாக தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அரசு படைகளுக்கும் இடையே நடந்த ஒரு மோதலில் 3 வீடுகள் தரை மட்டமாகின. 2 பேர் பலியானதும், 14 பேர் படுகாயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் நடந்த தாக்குதல்களில் 649 அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர் என ஐ.நா. புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com