

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, பாகிஸ்தானில் உள்ள விமான நிலையங்கள், மசூதிகள், ராணுவ தளங்கள், காவல் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தலிபானின் கிளை அமைப்பான தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாக பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியது.
இதையடுத்து ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்படும் முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தியது. இதனால் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்தது. முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, எல்லையில் போர்நிறுத்தம் கொண்டு வர இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.
இதற்கிடையில், கடந்த பிப்ரவரி 6-ந்தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா மசூதியில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் சோதனை சாவடி அருகே நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, அண்மையில் பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து நடத்திய அதிரடி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 18 பேர் உயிரிழந்ததாகவும், இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் எனவும் தலீபான் அரசு கூறியது.
இந்த நிலையில், நேற்று இரவு பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தலீபான்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். தலீபான்களின் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் ஆப்கானிஸ்தான் -பாகிஸ்தான் எல்லையில் பயங்கர மோதல் வெடித்தது.
இந்த தாக்குதலில் 55 பாகிஸ்தான் ராணுவ விரர்கள் கொல்லப்பட்டதாகவும், பாகிஸ்தானின் 2 ராணுவ தளங்கள் மற்றும் 19 ராணுவ சோதனை சாவடிகள் கைப்பற்றப்பட்டதாகவும் தலீபான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தலீபான் படையைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டதாகவும், 11 பேர் படுகாயமடைந்ததாகவும் கூறப்பட்டது.
அதே சமயம், பாகிஸ்தான் மந்திரி அத்தாவுல்லா தரார் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 130 தலீபான்கள் கொல்லப்பட்டதாகவும், 200-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மீது வெளிப்படையான போர் தொடுப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசிப் வெளியிட்டுள்ள பதிவில், “பாகிஸ்தானின் பொறுமை எல்லை கடந்துவிட்டது. தற்போது நடப்பது பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையிலான வெளிப்படையான போர்” என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து, ‘ஆபரேஷன் கசாப் லில் ஹக்’ என்ற பெயரில் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுல் உள்பட பல்வேறு முக்கிய இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில், ‘பாகிஸ்தான் தனது தாக்குதலை தொடர்ந்தால் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம்’ என ஆப்கானிஸ்தான் அரசின் செய்தி தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.