கம்போடியா-தாய்லாந்து எல்லையில் மோதல்: இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு


கம்போடியா-தாய்லாந்து எல்லையில் மோதல்: இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு
x
தினத்தந்தி 26 July 2025 10:42 AM IST (Updated: 26 July 2025 4:58 PM IST)
t-max-icont-min-icon

கம்போடியா-தாய்லாந்து நாடுகளின் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

பாங்காக்,

தாய்லாந்து-கம்போடியா ஆகிய நாடுகளின் எல்லையில் தா முயென் தாம் என்ற கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அமைந்துள்ள பகுதிக்கு இரு நாடுகளும் உரிமை கோருகின்றன. இதனால் இரு நாடுகள் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நிலவுகிறது. அந்த பிரச்சினை தொடர்பாக கடந்த மே மாதம் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக் கொண்டனர்.

அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் கம்போடிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து இரு நாடுகளும் தங்களது எல்லையை மூடுவதாக அறிவித்தன. இதற்கு பதிலடியாக தாய்லாந்தில் இருந்து காய்கறி, பழங்கள் இறக்குமதி மற்றும் அங்குள்ள திரைப்படங்களை திரையிட கம்போடியா அரசாங்கம் தடை விதித்தது. இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் சிக்கலான நிலை நீடித்தது.

இதற்கு தீர்வு காண இருதரப்பு தலைவர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். ஆனால் இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.எனவே தனது நாட்டில் உள்ள கம்போடியா தூதரை தாய்லாந்து வெளியேற்றியது. மேலும் தன்னுடைய நாட்டின் தூதரையும் கம்போடியாவில் இருந்து வெளியேறுமாறு தாய்லாந்து அரசாங்கம் உத்தரவிட்டது.

இதன் காரணமாக இரு நாடுகள் இடையேயான மோதல் மீண்டும் வெடித்தது. தாய்லாந்தின் சுரின், சிசா கெட் மற்றும் கம்போடியாவின் ஒடார் மீஞ்சே ஆகிய எல்லைப்புற மாகாணங்களில் உள்ள 6 நகரங்களுக்கு மோதல் பரவியது. அப்போது இரு நாட்டு ராணுவமும் ராக்கெட் வெடிகுண்டு, பீரங்கி போன்றவற்றால் பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர்.

இந்த மோதலில் இருதரப்பிலும் முதற்கட்டமாக 20 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை மேலும் 5 ராணுவ விரர்கள், 7 பொதுமக்கள் என மொத்தம்12 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இந்த மோதலால் இரு நாடுகளின் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதனையடுத்து, தாய்லாந்து, கம்போடியா எல்லையில் தொடரும் மோதல் காரணமாக தாய்லாந்து நாட்டில் 7 மாகாணங்களான உபோன் ரட்சதானி, பிரசாத் தா முயென் தோம். சிசாகெட், சோங் சாங் ப்ராக்யா பகுதிகளுக்கும் பான் க்லாங் லுயெக், பான் லேம் & பான் பாட் காட், டிராட்டுக்கு எல்லை பகுதிகளுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என இந்திய சுற்றுலா பயணிகளுக்கு தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், கம்போடியா - தாய்லாந்து எல்லையில் மோதல் நீடிக்கும் நிலையில், இந்தியர்களுக்காக 085592881676 என்ற அவசர உதவி எண்ணை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. மேலும் phnompenh@mea.gov.in என்ற மின்அஞ்சலில் விவரங்களை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story