இலங்கை துறைமுகத்தில் மீண்டும் சீன கப்பலை நிறுத்துவது குறித்து பரிசீலனை - இந்தியா எதிர்ப்பு

இலங்கையில் மீண்டும் சீன கப்பலை நிறுத்துவது குறித்து அந்த நாடு பரிசீலித்து வருவதாக கூறப்பட்டு உள்ளது.
இலங்கை துறைமுகத்தில் மீண்டும் சீன கப்பலை நிறுத்துவது குறித்து பரிசீலனை - இந்தியா எதிர்ப்பு
Published on

கொழும்பு,

இலங்கையில் ஹம்பன்தோட்டா துறைமுக பணிகள் உள்பட பல்வேறு மறுசீரமைப்பு பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி தங்கள் கடற்படை கப்பல்களை அடிக்கடி இலங்கை துறைமுகங்களுக்கு சீனா அனுப்பி வருகிறது.அந்தவகையில் சீன கடற்படை உளவு கப்பல்களில் ஒன்றான 'யுவான் வாங் 5', கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கப்பல் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால், அதை நிறுத்தி வைப்பதற்கு இலங்கையிடம் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. குறிப்பாக இந்த கப்பல் மூலம் இந்தியாவின் ராணுவ கட்டமைப்புகளை சீனா உளவு பார்க்கக்கூடும் என இலங்கையிடம் இந்தியா கவலை தெரிவித்தது.

இந்தியாவின் இந்த எதிர்ப்பை இலங்கை பரிசீலித்தது. எனினும் தாமதமாக சீனாவுக்கு அனுமதி அளித்தது. அதன்படி இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் இந்த கப்பல் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் இலங்கையில் கடல் சார்ந்த ஆய்வுகளுக்காக சீனாவின் ஆய்வுக்கப்பலான 'ஷி யான் 6'-ஐ இலங்கையில் நிறுத்தி வைக்க சீனா திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக இலங்கையிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. 90.6 மீட்டர் நீளமும், 17 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பல் எப்போது வரும்? என தெரியவில்லை. எனினும் வருகிற அக்டோபர் மாதம் இலங்கை கடற்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவின் இந்த வேண்டுகோளை இலங்கை பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கொழும்புவில் உள்ள சீன தூதரகம் இது தொடர்பாக கோரிக்கை விடுத்து இருப்பதாகவும், அது குறித்து பரிசீலித்து வருவதாகவும் இலங்கை வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் பிரியங்கா விக்மசிங்கே கூறியுள்ளார்.

இலங்கையின் இந்த முடிவு இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீன கப்பலால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேரிடக்கூடும் என்பதால் இது குறித்து இலங்கையிடம் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் சீன கப்பல் விவகாரம் இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதால், இலங்கை வெளியுறவு அமைச்சகம் தர்ம சங்கடத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக சீன கடற்படைக்கு சொந்தமான ஹாய் யாங் 24 என்ற கப்பல் 2 வார பயணமாக கடந்த வாரம் இலங்கை வந்து சென்றது. இதற்கும் இந்தியா கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com