ஈரானில் தொடரும் போராட்டம்; ஹேக்கிங் செய்யப்பட்ட அணு ஆற்றல் கழக சர்வர்

ஈரானில் இளம்பெண் அமினி மரணத்திற்கு நீதி கேட்டு நடந்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக அணு ஆற்றல் கழகத்தின் இ-மெயில் சர்வர் ஹேக்கிங் செய்யப்பட்டு உள்ளது.
ஈரானில் தொடரும் போராட்டம்; ஹேக்கிங் செய்யப்பட்ட அணு ஆற்றல் கழக சர்வர்
Published on

தெஹ்ரான்,

ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்களின்படி ஹிஜாப் அணிவது கட்டாயம் என்றாக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில், தெஹ்ரான் நகரில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த மாதம் 17-ம் தேதி உயிரிழந்து போனார்.

இதனை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 154 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகளும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளனர். அவர்களை கட்டுப்படுத்த ராணுவ படைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதுவரை நாடு முழுவதும் 150க்கும் கூடுதலானோர் பலியான நிலையில், இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 60 என்ற அளவிலேயே ஈரான் அரசு தொடர்புடைய ஊடக தகவல் குறிப்பிட்டு வருகிறது.

ஈரானில் இளம்பெண் அமினி மரணத்திற்கு நீதி கேட்டு நடந்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஹேக்கர்களின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இதன்படி, அந்நாட்டில் அணு ஆற்றல் கழகத்தின் துணை நிறுவனம் ஒன்றின் இ-மெயில் சர்வர் ஹேக்கிங் செய்யப்பட்டு உள்ளது.

இந்த சர்வர் ஆனது ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டுக்காக பணியாற்றி வருகிறது. பெர்சியன் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள பூஷெர் அணு உலையின் இ-மெயில் சர்வரை ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என ஈரான் அணு ஆற்றல் கழகம் உறுதி செய்துள்ளது.

அந்த சர்வரில் பயனாளர்களின் இ-மெயில்கள் உள்ளன. அவற்றில் தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் தினசரி தகவல் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பிற பொதுவான தகவல்களும் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

2011-ம் ஆண்டு ரஷிய தொழில்நுட்ப உதவியுடன் ஈரானின் முதல் அணு மின் உலையான பூஷெர் உருவாக்கப்பட்டு உள்ளது. ஈரானில் கடந்த காலத்திலும் ஹேக்கிங் நடந்து உள்ளது.

இதன்படி, ஈரானிய இஸ்லாமிய குடியரசின் நியூஸ் நெட்வொர்க் சார்பிலான தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பின்போது கடந்த 9-ந்தேதி உள்ளே புகுந்த புரட்சிக்காரர்கள் சில நிமிடங்கள் வரை நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

புஷெர் என்ற தெற்கு நகரில் அந்நாட்டு மத தலைவரான அயதுல்லா அலி காமினி கலந்து கொண்ட கூட்டம் ஒன்றின் நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்பட்டபோது, இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

அதில் நிகழ்ச்சி சில வினாடிகள் வரை போராட்டக்காரர்களின் செய்கையால் ஹேக்கிங் செய்யப்பட்டு, பெரிய மீசை, தாடி மற்றும் புருவங்களுடன் கூடிய கருப்பு வண்ண முகமூடி அணிந்த கார்ட்டூன் வரைபட தோற்றம் காட்டப்பட்டு உள்ளது. இந்த ஹேக்கிங்கிற்கு அவர்கள் பொறுப்பு ஏற்று உள்ளனர்.

அதனை தொடர்ந்து காமினியின் படமும், ஈரானில் கடந்த மாதம் உயிரிழந்த இளம்பெண்களான நிகா ஷாகராமி, ஹதீஸ் நஜாபி, மஹ்சா ஆமினி மற்றும் சரீனா இஸ்மாயில்ஜடே ஆகியோரின் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன. இந்த புகைப்படம் சில வினாடிகள் வரை திரையில் காட்டப்பட்டன.

எங்களுடன் இணைந்து, போராட வாருங்கள் என்ற செய்தியும் அந்த புகைப்படங்களுடன் காட்டப்பட்டன. எங்களுடைய இளைஞர்களின் ரத்தம் உங்கள் பிடியில் இருந்து வழிந்தோடுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com