சவுதியில் தொடர் தாக்குதல்: பலி 14 ஆக உயர்வு; 1,500 விமான சேவைகள் ரத்து

சவுதியின் பல பகுதிகளில், எண்ணெய் ஆலைகள் மற்றும் விமான நிலையங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன என தெரிவித்தனர்.

சவுதியில் தொடர் தாக்குதல்:  பலி 14 ஆக உயர்வு; 1,500 விமான சேவைகள் ரத்து
Published on: 

ரியாத்

சவுதி அரேபியாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதலை அடுத்து, 1,500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

ஏமன் நாட்டில், அரசு படையினர் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே உள்நாட்டு சண்டை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில், ஏமன் அரசுக்கு ஆதரவாக ஹவுதிகளை குறிவைத்து, சவுதி அரேபிய ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 10-ந்தேதி, சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தினர். இதில், இந்தியர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

விமான சேவைகள் ரத்து

இதனை தொடர்ந்து கிங் காலித், கிங் அப்துல் அஜீஸ், கிங் பஹத் ஆகிய சவுதி அரேபியாவின் முக்கிய விமான நிலையங்களில், 1,500-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

எத்தியாட், பிளை துபாய், லுப்தான்சா உள்ளிட்ட பிரபல விமான நிறுவனங்கள், சவுதி நகரங்களுக்கு இயக்கப்படும் சேவைகளை தற்காலிக அடிப்படையில் ரத்து செய்துள்ளன. இதனால், ஏராளமான வெளிநாட்டினர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். வங்காளதேச நாட்டை சேர்ந்த 500 பயணிகள், ரியாத்தில் சிக்கியுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. மேலும், மெக்காவுக்கு புனித யாத்திரை சென்றவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மீண்டும் தாக்குதல்

சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது, நேற்று மீண்டும் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 10-ந்தேதி நடந்த தாக்குதலில், நம் நாட்டைச்சேர்ந்த ஒருவர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சி மறைவதற்குள், நேற்று விமான நிலையத்தின் நான்காவது முனையம் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஒருவர் பலியானார். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 11 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதியின் பல பகுதிகளில் உள்ள எண்ணெய் ஆலைகள் மற்றும் விமான நிலையங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன என தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com