

புடாபெஸ்ட்,
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டதால், இந்திய மாணவர்கள் அனைவரும் ருமேனியா, ஹங்கேரி போன்ற அண்டை நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டு, அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
இந்த பணிகளை மேற்கொள்ள இந்திய அரசு உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய மந்திரிகளையும் அனுப்பி இருக்கிறது. அவர்களது மேற்பார்வையில் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். தனியார் விமானங்கள் தவிர இந்திய விமானப்படையின் சி-17 விமானமும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு உதவுவதற்காக ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் இந்தியர்கள் இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை அந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.