

புதுடெல்லி,
உக்ரைனில் கடந்த மாதம் 24-ந்தேதி ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து, அங்கு வசித்து வரும் இந்திய மாணவர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டதால், மாணவர்கள் அனைவரும் ருமேனியா, ஹங்கேரி போன்ற அண்டை நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டு, அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில் சுமியில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை ஒருங்கிணைக்க இந்திய தூதரகத்தின் ஒரு குழு பொல்டாவா நகரில் நிறுத்தப்பட்டுள்ளதாக உக்ரைனுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில், சுமியில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை பொல்டாவா வழியாக மேற்கு எல்லைகளுக்குப் பாதுகாப்பாகச் செல்வதை ஒருங்கிணைக்க இந்தியத் தூதரகத்தின் குழு பொல்டாவா நகரில் நிறுத்தப்பட்டுள்ளது.
உறுதிசெய்யப்பட்ட நேரம் மற்றும் தேதி விரைவில் வெளியிடப்படும். இந்திய மாணவர்கள் குறுகிய அறிவிப்பில் வெளியேற தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.