கொரோனா விவகாரம்: இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம் - அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல்

கொரோனா விவகாரத்தில் இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா விவகாரம்: இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம் - அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கொரோனா விவகாரத்தில், இந்தியாவின் தொடர் தேவைகளை அடையாளம் காண இந்திய அதிகாரிகளுடனும், சுகாதார நிபுணர்களுடனும் பேசி வருகிறோம். அவர்களுடன் தொடர்ந்து நெருங்கி பணியாற்றி வருகிறோம்.

இந்தியாவுக்கு அமெரிக்க அரசின் நிதி உதவி 10 கோடி டாலர் ஆகும். இதுபோக, தனியார் அமைப்புகள் 40 கோடி டாலர் நிதிஉதவி அளித்துள்ளன.

இதுவரை 6 விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள், 1,500 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 550 நடமாடும் ஆக்சிஜன் செறிவூட்டிகள், 10 லட்சம் விரைவு பரிசோதனை கருவிகள், 25 லட்சம் என்95 ரக முக கவசங்கள், பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் ஆகியவை அடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, அமெரிக்க செனட் உறுப்பினர் மார்க் வார்னர், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித்சிங் சாந்துவை தொடர்பு கொண்டு பேசினார். இந்தியாவுக்கு உதவ உறுதி பூண்டிருப்பதாக அவர் கூறினா. அவருக்கு இந்திய தூதர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இதுவரை 2 லட்சத்து 61 ஆயிரம் டோஸ் ரெம்டெசிவிர் மருந்துகளை அமெரிக்கா அனுப்பி வைத்ததற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எல்லாவகையிலும் உதவுவோம் என்று அமெரிக்க பென்டகன் செய்தித்தொடர்பாளர் பீட்டர் ஹக்ஸ் கூறினார்.

இதற்கிடையே, தமிழ்நாட்டை சேர்ந்தவரும், அமெரிக்கவாழ் தொழிலதிபருமான எம்.ஆர்.ரங்கசாமி கூறியதாவது:-

சுதந்திரத்துக்கு பிறகு இந்தியா மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்து வருகிறது. இந்தியாவுக்கு உதவ 24 மணி நேரமும் நிதி திரட்டி வருகிறேன்.

ஒவ்வொருவரும் அதிகமாக உதவ வேண்டிய நேரம் இதுவாகும். இப்படிப்பட்ட பிரச்சினைகள் அடிக்கடி வரப்போவதில்லை. எனவே, எல்லோரும் அதிக அளவில் உதவ வேண்டும். அதுபோல், இந்தியாவில் உள்ள உங்கள் உறவினர்களுக்கும், குடும்பத்தினருக்கும் உதவுங்கள்.

இந்தியாவில் பரவும் உருமாறிய கொரோனா, மிகவும் ஆபத்தானது. அதை ஒடுக்காவிட்டால், நேபாளம், வங்காளதேசம், இலங்கை போன்ற நாடுகளுக்கும் பரவி பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தும். இந்திய தரப்புடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். நிவாரண பொருட்களுக்கு இந்திய அரசு வரிவிலக்கு அளித்தது பாராட்டத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com