கொரோனா எதிரொலி; சீன எல்லையில் தேங்கி நிற்கும் 3,838 டிரக்குகள்

கொரோனா பாதிப்பு காணப்பட்டதன் எதிரொலியாக வியட்னாம் நாட்டில் இருந்து டிராகன் பழங்கள் இறக்குமதிக்கு சீனா 4 வார தடை விதித்து உள்ளது.
கொரோனா எதிரொலி; சீன எல்லையில் தேங்கி நிற்கும் 3,838 டிரக்குகள்
Published on

பீஜிங்,

சீனாவுக்கு வியட்னாம் நாட்டில் இருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதியாவது வழக்கம். இதன்படி, நடப்பு ஆண்டின் முதல் 11 மாதங்களில் 800 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான வியட்னாம் விவசாய விளைபொருட்களை சீனா இறக்குமதி செய்திருந்தது.

அவற்றில் டிராகன் பழங்கள், பலாப்பழங்கள் ஆகியவையும் அடங்கும். இந்நிலையில், கடந்த நவம்பர் 20ந்தேதியில் இருந்து டிசம்பர் 27ந்தேதி வரையிலான இறக்குமதியில், டிராகன் பழங்களில் கொரோனா பாதிப்பு காணப்பட்டது. இதன் எதிரொலியாக, வியட்னாம் நாட்டில் இருந்து டிராகன் பழங்கள் இறக்குமதிக்கு சீனா 4 வார தடை விதித்து உள்ளது.

இதன்படி, வருகிற ஜனவரி 26ந்தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும். இதனால் 400 கன்டெய்னர் லாரிகள் எல்லையில் இருந்து திரும்பி வந்தன. அந்த பொருட்கள் 30 சதவீத நஷ்டத்துடன் வியட்னாமிலேயே விற்கப்பட உள்ளன. இதேபோன்று விளைபொருட்கள் அடங்கிய 3,383 டிரக்குகள் (லாரிகள்) சீன எல்லையையொட்டிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com