

பீஜிங்,
சீனாவில் கடந்த 2003-ம் ஆண்டு சார்ஸ் நோய்க்கிருமி தாக்கியவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக பீஜிங் நகரில் சியோடாங்ஷன் என்ற தனி ஆஸ்பத்திரி உருவாக்கப்பட்டது. அந்த ஆஸ்பத்திரியில் கடந்த சில மாதங்களாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணம் அடைந்து வீடு திரும்பியதை தொடர்ந்து, இன்று (புதன்கிழமை) முதல் அந்த ஆஸ்பத்திரி மூடப்பட இருப்பதாக அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
சீனாவில் கொரோனா வைரஸ் உருவான உகான் நகரில் அந்த நோய்க்கிருமி தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்காலிகமாக 16 ஆஸ்பத்திரிகள் ஏற்படுத்தப்பட்டன. அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் கடைசி நோயாளி குணம் அடைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து அந்த 16 ஆஸ்பத்திரிகளும் மூடப்பட்டன.
இதற்கிடையே, சீனாவில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், 40 பேருக்கு கொரோனா அறிகுறி காணப்படுவதாகவும் சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.