பிலிப்பைன்ஸ் உள்துறை மந்திரிக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு

பிலிப்பைன்ஸ் உள்துறை மந்திரிக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் உள்துறை மந்திரிக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு
Published on

மணிலா,

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் சீனாவுக்கு வெளியே முதன் முதலில் உயிர் பலியை ஏற்படுத்தியது பிலிப்பைன்சில்தான்.

அந்த நாட்டில் இன்னமும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ளது. அங்கு புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று மாலை நிலவரப்படி அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்து 918 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 2,600 கடந்துள்ளது.

இந்த நிலையில் அந்த நாட்டின் உள்துறை மந்திரிக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு உள்துறை மந்திரியாக இருந்து வரும் எட்வர்டோ அனோவுக்கு கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார்.

ஒரு மாதத்தில் அவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு பூரண குணமடைந்தார்.

அதன் பின்னர் அவர் தனது பணிக்கு திரும்பி அரசு வேலைகளை கவனித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரிடம் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன.

இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில், 2-வது முறையாக அவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com