பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு; வருகிற ஜூன் 15ந்தேதி வரை தேர்வுகள் நடைபெறாது என அறிவிப்பு வெளியீடு

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு வருகிற ஜூன் 15ந்தேதி வரை தேர்வுகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு; வருகிற ஜூன் 15ந்தேதி வரை தேர்வுகள் நடைபெறாது என அறிவிப்பு வெளியீடு
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ளது. 17,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். வரும் வாரங்களில் தொடர்ந்து தொற்று உயர கூடுமெனில் நாட்டில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்தது.

இந்த சூழலில் இஸ்லாமாபாத் நகரில் நடந்த செய்தியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய கல்வி மந்திரி ஷப்காத் மெஹ்மூத், நாட்டில் வருகிற ஜூன் 15ந்தேதி வரை தேர்வுகள் நடைபெறாது என அறிவிப்பு வெளியிட்டார்.

கடந்த 18ந்தேதி நடந்த கடைசி கூட்டத்தில் திட்டமிட்டபடி தேர்வை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு பின்பு தொடர்ந்து தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என கூறினார்.

கடந்த வார இறுதியில், நாட்டில் தொற்று உயர்வால் தேர்வுக்கு தயாராக இயலவில்லை. அதனால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டதுடன், தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்ற ஹேஷ்டாக்குகளும் பிரபலமடைந்தன.

எனினும், எண்ணற்ற மாணவர்கள் தேர்வில் கலந்து கொண்டது போன்றும், தேர்வறைக்கு வெளியே பெற்றோர்கள் கூடியிருப்பது போன்ற வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளிவந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com