ஜெர்மனியில் கொரோனா கட்டுப்பாடுகள்; எதிர்ப்பு போராட்டத்தில் 45 போலீசார் படுகாயம்

ஜெர்மனியில் கொரோனா வைரசுக்கான கட்டுப்பாடுகளை எதிர்த்து நடந்த போராட்டத்தில் 45 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஜெர்மனியில் கொரோனா கட்டுப்பாடுகள்; எதிர்ப்பு போராட்டத்தில் 45 போலீசார் படுகாயம்
Published on

பெர்லின்,

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஜெர்மனியிலும் காணப்படுகிறது. பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது ஜெர்மனியில் பாதிப்பு குறைவாகவே உள்ளது என்றாலும் கடந்த சில தினங்களாக அங்கு தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று 955 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் முதல் இதுவரை இல்லாத வகையில் இது அதிக அளவாகும்.

ஜெர்மனியில் கடந்த ஏப்ரல் முதல் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற விஷயங்கள் மக்களிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், வைரஸ் பரவலுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு ஜெர்மனி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைநகர் பெர்லினில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். கூட்டத்தில் ஒரு சிலர் தவிர யாரும் மாஸ்க் அணியவில்லை.

இந்த ஊர்வலத்தில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர். ஜெர்மனியின் பல பகுதிகளில் இருந்து வந்த மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மாஸ்க் அணிய வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளும் தங்களின் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆதங்கப்பட்டனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

கட்டுப்பாடு விதிகளுக்கு எதிராக போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா வைரசுக்கான கட்டுப்பாடுகள் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பெர்லின் நகரிலும் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் முக கவசம் அணிதல் அல்லது சமூக இடைவெளி விதிகள் ஆகியவற்றை பின்பற்றாமல் பலர் கவனகுறைவுடன் இருந்தனர்.

போராட்டக்காரர்களை போலீசார் மதியத்தில் இருந்து கலைக்க தொடங்கினர். ஆனால், பிராண்டன்பர்க் கேட் பகுதியில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் மாலை வரை நின்றிருந்தனர். சுகாதார விதிகளை கடைப்பிடிக்காத போராட்ட ஏற்பாட்டாளர்கள் மீது போலீசார் சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுக்க தொடங்கினர்.

இதேபோன்று நியூகோயெல்லன் மாவட்டத்தில் நடந்த மற்றொரு போராட்டத்தில் போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. வெடிபொருட்களும் வெடிக்கப்பட்டன. போலீசாரின் 2 வாகனங்கள் மற்றும் கட்சி அலுவலகம் ஒன்று இதில் சேதமடைந்தன.

கூடியிருந்த போராட்டக்காரர்களை கலைக்கும் பணியில் 1,100 போலீசார் ஈடுபட்டிருந்தனர். போராட்டங்களில் ஈடுபட்டவர்களின் வன்முறையால் போலீசாரில் 45 பேர் வரை காயமடைந்து உள்ளனர். அவர்களில் 3 பேர் மீது கண்ணாடி துண்டுகள் பட்டு காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தி வரும் காலகட்டங்களில் ஊர்வலங்களை நடத்துவது சாத்தியமென்றாலும், இதுபோன்ற ஒன்றை எதிர்பார்க்கவில்லை என அந்நாட்டு சுகாதார மந்திரி ஜென்ஸ் ஸ்பான் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com