இந்தியர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு - இங்கிலாந்து அரசு அறிவிப்பு

இந்தியர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டணம் குறைக்கப்படுவதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
இந்தியர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு - இங்கிலாந்து அரசு அறிவிப்பு
Published on

லண்டன்,

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக இருந்து வந்த சமயத்தில், இந்தியாவுடனான போக்குவரத்தை பல்வேறு உலக நாடுகள் ரத்து செய்தன. அந்த வகையில் இங்கிலாந்து அரசு இந்தியாவை சிவப்புப் பட்டியலில் வைத்தது. இதனால் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இங்கிலாந்து அரசு தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் இந்தியாவை சிவப்புப் பட்டியலில் இருந்து இங்கிலாந்து அரசு நீக்கியது. தற்போது அந்நாட்டின் ஆம்பர் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டினருக்கான கொரோனா பரிசோதனை கட்டணத்தை அந்நாட்டு அரசு குறைத்துள்ளது.

அதன்படி அந்நாட்டின் சிவப்புப் பட்டியல் அல்லாமல் இதர இரண்டு பட்டியல்களான பச்சை மற்றும் ஆம்பர் பட்டியல்களில் இடம்பெற்றுள்ள நாடுகளைச் சேர்ந்தவாகள் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டிருந்தால், அவர்களுக்கான கொரோனா பரிசோதனை கட்டணம் 68 பவுண்டுகளாக (ரூ.6,997) குறைக்கப்பட்டுள்ளது. முன்பு இது 88 பவுண்டுகளாக (ரூ.9,055) இருந்தது.

தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக்கொண்டவர்கள் இங்கிலாந்து சென்ற இரண்டு நாள்களுக்குள் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம். ஆம்பர் பட்டியலில் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களாகவும், தடுப்பூசி செலுத்தாதவர்களாகவும் இருந்தால் அவர்கள் இங்கிலாந்து சென்ற 2-வது மற்றும் 8-வது நாளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கான பரிசோதனை கட்டணம் 136 பவுண்டுகளாக (ரூ.13,994) குறைக்கப்பட்டுள்ளது. முன் இது 170 பவுண்டுகளாக (ரூ.17,493) இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com