குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும் என ரஷிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்
Published on

மாஸ்கோ,

உலக நாடுகளையெல்லாம் உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்துவதற்கான தடுப்பூசியை தயாரித்து, சோதனைகளை முடித்து, பொதுமக்கள் உபயோகத்துக்கு கொண்டு வருவதில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா என பல நாடுகளும் போட்டி போட்டு வருகின்றன. இந்த நாடுகளில் தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் உள்ளன.

இந்த நிலையில், ரஷியாவில் கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் சோதனைகள் நிறைவு அடைந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ ஏற்கனவே கடந்த வாரம் அறிவித்து விட்டார். இந்த தடுப்பூசியை முறைப்படி பதிவு செய்வதற்கான பணிகள் முழுவீச்சில் அங்கு நடக்கின்றன. பதிவு செய்யப்பட்டதும் அக்டோபர் மாதம் இந்த தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த தடுப்பூசி மீது உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆனால் ரஷியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசியை கொண்டு வருவது தாமதமாகும் என இப்போது அந்த நிறுவன தரப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி அந்த நிறுவனத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் கூறியதாவது:-

நாங்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி குழந்தைகளுக்கும் வேலை செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம். இருந்தபோதிலும், ரஷிய நாட்டின் சட்டப்படி ஒரு தடுப்பூசியானது பெரியவர்களுக்கு செலுத்தும் சோதனைகளின் முழு சுற்றையும் கடந்து செல்ல வேண்டும். அதன் பின்னர்தான் குழந்தைகளுக்கு பரிசோதிக்க முடியும். எனவே மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை முடிந்தபின்னர், 18 சோதனைகளை நடத்ததுவதற்கு நாங்கள் அனுமதிக்கப்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு இடையே செச்சனோவ் டிரான்ஸ்லேஸனல் மருத்துவம் மற்றும் உயிரிதொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் வாதிம் டாராசோவ் கூறும்போது, தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்துவதற்கு முன்பாக இளம்விலங்குகள் மீது சோதனைகள் மேற்கொள்ளப்படும். அதன்பிறகு குழந்தைகளுக்கு தடுப்பூசியை பயன்படுத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும். குழந்தைகளுக்கு தடுப்பூசியை பயன்படுத்துவது பற்றி இப்போதே பேசுவது சரியல்ல. அவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஆபத்துக்கு ஆளாகும் பிரிவினர் அல்ல என்று குறிப்பிட்டார்.

கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசி இன்னும் 10 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்டு விடும் என ரஷிய நேரடி முதலீடு நிதியம் எதிர்பார்ப்பதாக அதன் தலைமை செயல் அதிகாரி கிரில் டிமிட்ரிவ் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தடுப்பூசியின் 1 கோடி டோஸ் நடப்பாண்டு இறுதிக்குள் தயாரிக்கப்பட்டு விடும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com