

விருதுநகர்,
கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், வீட்டில் இருப்பவர்களும் அத்தியாவசிய தேவைக்காக வெளியே சென்று வருபவர்களும் தினசரி 10 முதல் 15 முறை வரை சோப்பு நீரால் கை கழுவ வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் 20 வினாடிகள் கை கழுவ வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழகம் முழுவதும் உள்ளவர்கள் கை கழுவுவதற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. தமிழகத்தில் 8 கோடியே 20 லட்சம் பேர் இருப்பதாக கணக்கிட்டு அவர்கள் 15 முறை கை கழுவுவதற்கு 1640 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினசரி தேவைப்படும் என ஒரு மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
மொத்தம் உள்ள 8 கோடியே 20 லட்சம் பேரில் முதியவர்கள், குழந்தைகள், சிகிச்சை பெற்று வருவோர் கை கழுவுதல் தவிர்க்கப்படும் நிலையில் 5 கோடி பேர் தினசரி 10 முறை கை கழுவினால் 660 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவலாக கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் கை கழுவுவதற்கு தேவையான தண்ணீர் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும் நகர்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் நிலத்தடிநீர் ஓரளவு கைகொடுக்கும் நிலை உள்ளதால் கை கழுவுவதற்கு தேவையான தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பொதுமக்கள் தங்கள் பிற தேவைகளுக்கான தண்ணீர் செலவை குறைத்துக்கொண்டு கை கழுவுவதற்கு தேவையான தண்ணீரை கிடைக்கும் வகையில் முன்னேற்பாடுகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். ஏனெனில் தற்போது உள்ள நிலையில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை தான் முன்னுரிமை பெற வேண்டி உள்ளது. எனவே அதற்கு தேவையான தண்ணீரை பொதுமக்கள் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.