24 நாட்களுக்கு பிறகு நியூசிலாந்தில் மறுபடியும் கொரோனா பாதிப்பு - 2 பெண்களுக்கு தொற்று உறுதி

உலக நாடுகளையெல்லாம் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்று, நியூசிலாந்து நாட்டையும் விட்டு வைக்கவில்லை. அங்கு மொத்தம் 1,154 பேருக்குத்தான் கொரோனா தொற்று பரவியது. அவர்களில் 22 பேர் மட்டுமே சிகிச்சை பலனின்றி இறந்தனர். மற்ற அனைவரும் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினார்.
24 நாட்களுக்கு பிறகு நியூசிலாந்தில் மறுபடியும் கொரோனா பாதிப்பு - 2 பெண்களுக்கு தொற்று உறுதி
Published on

வெலிங்டன்,

அங்கு தொடர்ந்து 17 நாட்களாக கொரோனா தொற்று யாரையும் பாதிக்கவில்லை. கடைசி நோயாளியும் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடு திரும்பினார். இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த நாடு கொரோனாவில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. எல்லைகள் மட்டும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இது அந்த நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் ஒரு சேர அளித்தது.

இருப்பினும் இது குறித்து கருத்து தெரிவித்த அந்த நாட்டின் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், நாடு நிச்சயமாக மீண்டும் கொரோனா பாதிப்புகளை பார்க்கும். கொரோனாவை நீக்குதல் என்பது ஒரே காலகட்டத்தில் இல்லை. அது தொடர்ச்சியான முயற்சி என்று எச்சரிக்கை உணர்வுடன் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் 24 நாட்களுக்கு பிறகு அங்கு மறுபடியும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் இங்கிலாந்து நாட்டில் இருந்து டோஹா, பிரிஸ்பேன் வழியாக கடந்த 7-ந் தேதி நியூசிலாந்து வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் 30 வயது கடந்தவர், மற்றவர் 40 வயது கடந்தவர். அவர்கள் ஆக்லாந்தில் ஒரு ஓட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டனர்.

திடீரென இறந்துபோன தங்களது பெற்றோரின் துக்க நிகழ்வில் கலந்து கொள்ள சிறப்பு அனுமதி கேட்டு அவர்கள் விண்ணப்பித்தனர். அதன்பேரில் அவர்களுக்கு நியூசிலாந்து அரசு அனுமதி அளித்தது. அவர்கள் 13-ந் தேதி வெலிங்டன் சென்றனர். அவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வில்லை. தனி வாகனத்தில்தான் வெலிங்டன் பயணம் மேற்கொண்டனர். அங்கு ஒரே ஒரு குடும்ப உறுப்பினருடன் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் அந்த பெண்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறி தென்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் தங்கி இருந்த குடும்ப உறுப்பினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த தகவல்களை நியூசிலாந்து சுகாதாரத்துறை தலைமை இயக்குனர் ஆஷ்லே புளூம்பெர்க் வெளியிட்டுள்ளார். நியூசிலாந்தில் மறுபடியும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அந்த நாட்டு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பெண்கள் 2 பேரையும் சேர்த்து நியூசிலாந்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 1,156 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக நீடிக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com